திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் வெற்றி பெறும் அணிகள் மாவட்ட அளவிலும், அதில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலும் விளையாடுவார்கள். இதற்காக திருப்பத்தூர் மாவட்டத்திலுள்ள கந்திலி, திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி, ஆம்பூர் என மண்டலங்களாக பிரித்து அந்தந்த மண்டலங்களில் உள்ள பள்ளிகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
ஆலங்காயத்தில் உள்ள பிருந்தாவன் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் கேரம், வாலிபால் விளையாட்டுகள் நடைபெற்றன. பல பள்ளிகளைச் சேர்ந்த 500க்கும் அதிகமான மாணவ – மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டி, 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டி, 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான போட்டி நடைபெற்றது. இந்த மூன்று பிரிவிலும் ஆண்கள் பிரிவு, பெண்கள் பிரிவு எனத் தனித்தனியாக கலந்துகொண்டனர். இப்படி ஒவ்வொரு பள்ளியில் இருந்தும் இரண்டு போட்டிகளில் 12 அணிகள் கலந்துகொண்டன.
இப்படி கோகோ, டென்னிஸ், வலைப் பந்து போன்ற போட்டிகள் ஒவ்வொரு பள்ளிக்கும் நடைபெற்றன. இந்த போட்டிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனியன் சுப்பிராயன் கலந்துகொண்டு தொடங்கி வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குணசுந்திரி கலந்துகொண்டனர். விளையாட்டுக்கான ஏற்பாடுகளைப் பள்ளியின் தாளாளர் ஆனந்தன், பள்ளி முதல்வர் பரிமளா தேவி ஏற்பாடு செய்திருந்தனர்.
இங்கு நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறுபவர்கள் அதற்கு அடுத்ததாக மாவட்ட அளவில் விளையாடுவதற்குத் தேர்வு செய்யப்படுவார்கள்.