அண்மைக்காலங்களில் பிரியாணி சாப்பிடுவது மனிதர்களின் உரிமையாகவே ஆகிவிட்டது. அதன் எதிரொலியே பஜார், கடை வீதிகள், தெருவோரங்களில் மலிவு விலை பிரியாணி கடைகள் முளைக்கத் தொடங்கியுள்ளன.
நெல்லையிலுள்ள பாளை சமாதானபுரம், பிரியாணி கடை ஒன்றில் புளியங்குடியைச் சேர்ந்த ஒருவர் குடும்பத்துடன் பிரியாணி சாப்பிட்டிருக்கிறார். அப்போது பிரியாணியில் புழு இறந்து கிடப்பது தெரியவர, கடைக்காரரிடம் புகார் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவருக்கும் கடைக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட, அவரோ உணவுப்பாதுகாப்புத்துறையினரிடம் புகார் தெரிவித்து விட்டார். அங்கு வந்த அதிகாரிகளான, முத்துக்குமார், ஜெயராஜ், மணிகண்டன் ஆகியோர் விசாரணை நடத்தினர். பிரியாணி தரமற்றதாக இருந்ததால் அதனை பினாயில் ஊற்றி அழித்தனர். கடை உரிமையாளரைக் கடுமையாக எச்சரிக்கவும் செய்தனர்.
இது குறித்து அந்த அதிகாரிகள், பாளை சமாதனபுரத்தின் பிரியாணி கடையில் சாப்பிட்ட ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அங்கு சோதனை செய்தோம். அங்குள்ள பொருட்கள், மற்றும் கடையில் சூழல் சுகாதாரமற்று இருந்ததால், பிரியாணியை பினாயில் ஊற்றி அழித்துவிட்டு, கடை உரிமையாளரை எச்சரித்து பின், கடையை தரமாக, சுகாதாரமாக வைத்தக் கொண்டு திறக்க எச்சரித்திருறோம் என்றனர்.தரமற்ற பிரியாணி அழிப்பு சம்பவம், பாளையில் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.