மதுரையில் நீட் தேர்வு எழுதிவிட்டு பேருந்தில் சொந்த ஊருக்குத் திரும்பும்போது மயங்கி உயிரிழந்த மாற்றுத்திறனாளி மாணவியின் உடலை பார்த்து கதறி அழுத தந்தை முனியசாமி.
ராமநாதபுரம் மாவட்டம் பாப்பனம் கிராம பகுதியைச் சேர்ந்த முனியசாமி என்பவரின் மகள் சந்தியா 17 வயது மாற்றுத்திறனாளி. இவர் மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதுவதற்காக வந்துள்ளார். தேர்விற்காக காலையில் இருந்து உணவு அருந்தாத நிலையில் மதியம் உணவும் உண்காமல் மன அழுத்தத்தோடு தேர்வு எழுதியிருக்கிறார். இந்நிலையில் தேர்வு முடிவடைந்து பேருந்தில் ராமநாதபுரம் சென்று கொண்டிருக்கும்போது திருப்புவனம் அருகே சென்றபோது மாணவி மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக பேருந்தில் இருந்தவர்கள் 108 மூலம் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மருத்துவமனையில் மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி வரும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தவிட்டார் என தெரிவித்தனர். இந்நிலையில் இன்று காலை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உள்ள உடற்கூராய்வு மையத்தில் உடற்கூராய்வு முடிந்து மாணவியின் உடலை பார்த்து கதறிய தந்தை முனியசாமி, “எல்லாம் இந்த பாழாய்போன ‘நீட்’டால் வந்தது. காலையில் சோதிக்கிறேன் என்று என் மகள் காதில் கிடந்த தோடு, காலில் கிடந்த கொலுசு முதற்கொண்டு கழுட்டினார்கள் அடுத்து துப்பட்டாவை கழுட்ட அவள் ஒத்துக்கொள்ளவில்லை வெட்கமா இருக்கு வேண்டாமே என்றதற்கு அதை கேட்காமல் உறுவிகொண்டனர். அழுது கொண்டே தான் பரிட்சை எழுத உள்ளே போனாள்.
சாப்பிடாமல் இருந்துள்ளார் எழுதிகொண்டிருக்கும்போது தண்ணீர் கேட்டுள்ளார் அதைகூட கொடுக்க மறுத்துள்ளனர். கடுமையான மன உளைச்சலில் தான் உயிர் பிரிந்துள்ளது. எல்லாத்துக்கும் நீட் தான் காரணம். என் மகளோடு நீட் பரிட்சை தொலையட்டும் இனி வரும் அரசு நீட்டை தடை செய்யவேண்டும்” என்று கதறி அழுதார். அடுத்து சொந்த ஊரான பாப்பனம் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் மூலமாக அவரின் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உடலை புதைக்க மறுத்து ஊர் மக்கள் தர்ணா செய்து வருகின்றனர். பதட்டமான சூழ்நிலையே காணப்படுகிறது. இது குறித்து திருப்புவனம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.