அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணங்கள் 50 சதவிகிதம் உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணங்கள் 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. அறிவிப்பின்படி, ஒரு தாளுக்குத் தேர்வுக் கட்டணம் 150 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 225 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இளநிலை செய்முறை சமர்ப்பிப்புக்கு 300 ரூபாய் தேர்வுக் கட்டணம் இருந்த நிலையில் தற்போது 450 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான செய்முறை தேர்வுக் கட்டணம் 450 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 650 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. முதுநிலை மாணவர்களுக்கான ஆய்வுக் கட்டுரை சமர்ப்பிப்புக்குத் தேர்வுக் கட்டணம் 600 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது 900 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. டிகிரி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணம் 1000 ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியிடம், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பலர் பணிநீக்கம் செய்யப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அமைச்சர் பொன்முடி, ''தகுதி இல்லை என்று நீதிமன்றம் சுட்டிக் காட்டியதன் அடிப்படையில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 56 பேரும் பிசினஸ் அட்மினிஸ்ட்ரேஷன் படித்துள்ள நிலையில் அவர்களை பேராசிரியர் பணிக்கு சேர்த்துள்ளதே தவறு” எனத் தெரிவித்தார். தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டணங்கள் 50 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு, 'இந்த செமஸ்டர் தேர்வில் இந்த கட்டண உயர்வு இருக்காது. பழைய கட்டணமே இருக்கும்' எனத் தெரிவித்தார்.