அதிமுக முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், அவரது மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1991 - 1996ல் அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வணிக வரித்துறைக்கு அமைச்சராக, 1993ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி முதல் அமைச்சராக நியமித்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், கடலாடி சத்தியமூர்த்தி அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சத்தியமூர்த்திக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் வந்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த விசாரணையின் முடிவில் வருமானத்துக்கு அதிகமாக 83 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய்க்கு தனது பெயரிலும், மனைவி சந்திரா பெயரிலும் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புதுறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து இருவரையும் விடுவித்தது. இந்த வழக்கிலிருந்து இருவரும் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து 2001ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
இதற்கிடையில் 2011ஆம் ஆண்டு கடலாடி சத்தியமூர்த்தி திமுக-வில் இணைந்தார். அந்த வழக்கில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், கடலாடி சத்தியமூர்த்தியும், அவரது மனைவி சந்திரா ஆகியோர் விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார். மேலும் சத்தியமூர்த்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் 5 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். அவரது மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டு சிறையுடன், 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும், சரணடைய கால அவகாசம் அளிக்க வேண்டும் என இருவர் தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.