திருச்சி, காட்டூர் பகுதியில் அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. அதில் துவாக்குடி பழனியாண்டவர் தெருவைச் சேர்ந்த பக்கிரிசாமி (72) என்பவர் காவலாளியாக பணியாற்றி வந்தார். குடியிருப்பில் உள்ள வீடுகளிலிருந்து முதியவருக்கு காலை மற்றும் மாலை வேளைகளில் தேநீர் மற்றும் காபி கொடுப்பது வழக்கம். அந்த வகையில் ஒரு வீட்டிலிருந்து 8 வயது சிறுமி (தற்போது 12 வயது) முதியவருக்கு அடிக்கடி காபி கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 04.01.2020 அன்று அந்த சிறுமியை முதியவர் தனியாக அழைத்துச்சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது குறித்து பெற்றோர்களிடம் சிறுமி தெரிவித்ததையடுத்து, திருவெறும்பூர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் முதியவரைக் கைது செய்து, திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தனர்.
விசாரணைகள் மற்றும் இருதரப்பு வாதங்கள் முடிந்த நிலையில் வியாழக்கிழமை இந்த வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டது. குற்றம் உறுதியானதையடுத்து பக்கிரிசாமிக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது. கட்டத்தவறினால், மேலும் 6 மாதம் சிறைத் தண்டனையும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். மேலும் சிறுமிக்கு அரசுத்தரப்பிலிருந்து ரூ. 50,000 இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக எம்கே. ஜாகிர்உசேன் ஆஜரானார்.