சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தொடங்கப்பட்ட நாளை முன்னிட்டு, சிறப்பு கட்டண சலுகையை சென்னை மெட்ரோ நிர்வாகம் வழங்கியிருந்தது. அதன்படி, டிசம்பர் 3 ஆம் தேதி ஒரு நாள் மட்டும் க்யூஆர் பயணச்சீட்டு ( paytm, phonepe, static QR) முறையை பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் ஒருவழிப் பயணத்திற்கு வெறும் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அந்த அறிவிப்பை தொடர்ந்து வடகிழக்கு பருவமழை காரணமாக டிசம்பர் 2 லிருந்து ‘மிக்ஜம்’ புயல் மற்றும் கனமழை பொழிந்ததால், சென்னை மட்டுமல்லாது காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் பல இடங்களில் மழைநீர் தேங்கி பாதிப்பு ஏற்பட்டது. சென்னை,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 6000 ரூபாய் நிவாரணம் வழங்கும் பணிகளுக்கான டோக்கன் விநியோகத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது.
மெட்ரோ சிறப்பு கட்டண சலுகையை ‘மிக்ஜம்’ புயல் நேரத்தில் கொண்டுவர முடியாத நிலை இருந்தது. இந்நிலையில் டிசம்பர் 3 க்கு வழங்குவதாக அறிவித்திருந்த சலுகை திட்டத்தை மெட்ரோ பயணிகள் நலன் கருதி, வருகின்ற 17ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ரூ.5 என்ற கட்டணத்தில் பயணிக்கலாம் என மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.