சமயபுரம் கோவிலுக்கு பாதயாத்திரை சென்ற போது விபத்தில் பலியான 5 பக்தர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்லாக்கோட்டை ஊராட்சி கண்ணுகுடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என ஏராளமானவர்கள் சமயபுரம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்றனர். இந்நிலையில் நேற்று அதிகாலை தஞ்சை மாவட்டம் வளப்பக்குடி கிராமம் அருகே நடந்து சென்ற பக்தர்கள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் கண்ணுகுடிப்பட்டி என்கிற ஒரே கிராமத்தைச் சேர்ந்த முத்துசாமி (60), ராணி (37), மோகனாம்பாள் (27), மீனா (26), தனலட்சுமி (36) ஆகிய 5 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இவர்களுடன் நடந்து சென்ற சங்கீதா படுகாயமடைந்து தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிறப்புச் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த தமிழ்நாடு முதலமைச்சர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்ததுடன் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணமாக தலா ரூ.2 லட்சமும், காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் நபருக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க உத்தரவிட்டார்.
இந்நிலையில் இன்று அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன், கந்தர்வக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை மற்றும் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா ஆகியோர் கண்ணுக்குடிப்பட்டி கிராமத்திற்கு சென்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர்களுக்கு ஆறுதல் கூறி முதலமைச்சரின் நிவாரண நிதிக்கான காசோலையை வழங்கினர். நிகழ்ச்சியில் அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.