கடலூர் மாவட்டம் சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் அதிகளவில் விற்கப்படுவதாக பொதுமக்கள் மத்தியில் புகார் வந்தது. பின்னர் அதன் அடிப்படையில் சிதம்பரம் நகரில் உள்ள கடைகளுக்கு புகையிலைப் பொருட்களை மொத்தமாக சப்ளை செய்வது யார் என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதனிடையே சிதம்பரம் மாலை கட்டி தெருவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இந்தராம் மகன் நைனாராம்(30) என்பவர் மளிகை கடை உள்ளிட்ட பல்வேறு சிறுகடைகளுக்கு புகையிலை பொருட்களை மொத்தமாகவும், சில்லரையாகவும் சப்பளை செய்து வருகிறார் என்பது விசாரணையில் தெரியவந்தது. மேலும் அவர் சிதம்பரத்தை அடுத்த பொன்னாங்கணிமேடு என்ற கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து புகையிலை குடோனாக பயன்படுத்தி வருவதும் அங்கு அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பான் மசாலா குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை மூட்டை மூட்டையாக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து சிதம்பரம் தாலுகா ஆய்வாளர் (பொறுப்பு) முருகேசன், சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன். சிதம்பரம் நகர சப்இன்ஸ்பெக்டர் சுரேஷ் முருகன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பந்தப்பட்ட பகுதிக்கு சென்று பதுக்கி வைக்கப்பட்டிருந்த புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதன் மொத்த மதிப்பு ரூபாய் 5 லட்சம் என கூறப்படுகிறது. ஒரே நேரத்தில் ரூ 5 லட்சம் மதிப்பிலான புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்தது வணிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.