தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி கிராமம் காலேஜ் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தேனி மாவட்ட உணவுப் பொருள் பாதுகாப்பு நியமன அலுவலர் சுகுணா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்தனர்.
அப்பொழுது வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்பக்கம் பூட்டபட்டிருந்ததால் காவல்துறையினரின் உதவியோடு பூட்டிய வீட்டின் கதவை உடைத்து அதிரடியாக உள்ளே சென்று ஆய்வு நடத்தினர். அப்போது வீட்டினுள் 30 க்கு மேற்பட்ட மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தது, மூடையை உடைத்து சோதனை மேற்கொண்டதில், புகையிலை பொருட்கள், பான் மசாலா, போதை பாக்குகள் உள்ளிட்ட 5 வகையான போதைப்பொருள்கள் இருப்பது தெரியவந்தது. உடனே அந்த போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர் அந்த போதை பொருள்களின் மதிப்பு சுமார் 5லட்சம் இருக்கும் என உணவு பாதுகாப்பு அதிகாரி சுகுணா தெரிவித்தார்.
இப்படி பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் அதே பகுதியை சேர்ந்த சித்தன் என்பது தெரியவந்தது இவர் சமீபத்தில் 20 நாட்களுக்கு முன்பு தான் தேனியில் பலசரக்கு கடை வைத்திருக்கும் நவரத்தினவேல் என்பவருக்கு வாடகைக்கு விட்டதாக முதல் கட்ட தகவலில் தெரியவந்தது. இது குறித்து அல்லிநகரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து போதை பொருட்கள் பதுக்கிய நாகரத்தினவேலை தேடி வருகின்றனர். இப்படி தடை செய்யப்பட்ட போதை பொருள்களை வீட்டில் பறிமுதல் செய்தது அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.