தீபாவளியை கொண்டாட மக்கள் தயாராகிக் கொண்டிருக்கும் போது சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது ஒரு கண்ணீர் வீடியோ...
நாங்கள் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த 48 பேர் ஒரு ஏஜன்டை நம்பி 4 மாதம் முன்பு மலேசியா வந்து சாப்பாடு, தண்ணி, சம்பளம் இல்லாமல் காட்டுக்குள் தவிக்கிறோம். 10 டீம்கள் செய்ய முடியாது என்று திரும்பிப்போன வேலையை இப்ப நாங்க செய்றோம். 15 நாளா சாப்பாட்டுக்கு கூட பணம் தரல. எங்கள ஊருக்கு அனுப்புங்க என்று கேட்டால் பிணமாகதான் அனுப்புவோம்னு மிரட்டுறாங்க. எங்கள் உயிருக்கு உத்தரவாதம் இல்ல எங்க குடும்பங்களுக்கு கூட சொல்லவில்லை. வெளிநாட்டு வேலைன்னு நம்பி வந்து இப்படி தவிக்கிறோம். எங்களை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று தமிழக முதல்வருக்கும் தமிழக உறவுகளுக்கும் கண்ணீர் கோரிக்கை வைத்தனர்.
இந்த வீடியோ முகநூல், வாட்ஸ் அப் என்று சமூகவலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த சம்பவத்தை மலேசிய மனிதவள அமைச்சர் குலசேகரன் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் அந்த கொத்தடிமை தமிழர்கள் மீட்கப்பட்டுள்ளனர். வறுமையை போக்க நகை நிலங்களை விற்று வெளிநாடு போய் இப்படி உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் தவிக்கும் இளைஞர்களை காக்க இந்திய, தமிழக அரசுகள் நடவடிக்கை எடுக்க தயங்குவதால்தான் தினம், தினம் இப்படியான கண்ணீர் கோரிக்கைகள் வந்துகொண்டே இருக்கிறது.