Skip to main content

அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆய்வு?

Published on 27/12/2024 | Edited on 27/12/2024
 Governor inspection in Anna University

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரைக் கடந்த 25ஆம் தேதி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் அதன் எஃப்.ஐ.ஆர் நகல் வெளியாகி சர்ச்சையானது. இதையடுத்து, இந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் புகைப்படமோ, எஃப்.ஐ.ஆர். நகலையோ இணையத்தளத்தில் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இத்தகைய சூழலில் தான் பெண் வழக்கறிஞர் வரலட்சுமி என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்திற்குக் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அந்த கடிதத்தில், ‘இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணையில் குறைபாடு இருப்பதாகத் தெரிகிறது. இந்த வழக்கில் ஞானசேகரன்  கைது செய்யப்பட்ட போதிலும், பின்னணியில் யாரோ ஒருவர் ‘சார்’ இருக்கிறார் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அவர் யார் என்ற விவரம் இதுவரையிலும் தெரியவில்லை. எனவே, இந்த வழக்கைப் பொறுத்தவரை காவல்துறை விசாரித்தால் சரியாக இருக்காது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும்’ என்று கோரிக்கை வைத்திருந்தார்.

அதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றம் இந்த வழக்கைத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது. இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக ஆளுநரும், பல்கலைக்கழகத்தின் வேந்தருமான ஆர்.என். ரவி நாளை (28.12.2024) ஆய்வு மேற்கொள்ள உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நாளை நண்பகல் 12.30 மணியளவில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி ஆய்வு நடத்துவார் எனக் கூறப்படுகிறது. 

சார்ந்த செய்திகள்