கடலூர் மாவட்டம் ரெட்டிசாவடி அருகே உள்ளது கீழ் அழிஞ்சி பட்டு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சீனு. இவர் தன் பெயருக்கு கிரையம் பெற்ற இரண்டு ஏக்கர் விவசாய நிலத்தை உட்பிரிவு செய்து தன் பெயருக்கு பட்டா மாற்றம் செய்து தருமாறு வட்டாட்சியருக்கு இணைய வழியில் முறைப்படி விண்ணப்பித்துள்ளார்.
சீனு தனது நிலம் அமைந்துள்ள பகுதியைச் சேர்ந்த மதலப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் அவர்களை சென்று சந்தித்துள்ளார். அப்போது அவர் நீங்கள் இணைய வழியில் மனு செய்துவிட்டால் உடனே நாங்கள் பட்டா மாற்றி கொடுத்து விடுவோமா? அது எப்படி நடக்கும் நீங்கள் கொடுக்க வேண்டியதை எங்களுக்கு கொடுத்தால் தானே பட்ட மாற்றம் செய்ய முடியும் என்று பேரம் பேசி உள்ளார். பேரத்தின் முடிவில் பட்டா மாற்றம் செய்ய 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் அவரிடம் பணம் ஏற்பாடு செய்துவிட்டு வருவதாக கூறிவிட்டு புறப்பட்ட சீனு 'நமக்கு சொந்தமான நிலத்தை நம் பெயருக்கு பட்டா மாற்றிக் கொடுக்க 40 ஆயிரம் லஞ்சமா... இது என்ன கொடுமை' என்று வேதனையின் உச்சத்திற்கு சென்றார்.
இதற்கு ஒரு முடிவுகட்ட முடிவு செய்தார். அந்த முடிவு அவர் நேரடியாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் அலுவலகத்தில் போய் நின்றார். கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரன் பட்டா மாற்றம் செய்ய 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டது குறித்து புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழிகாட்டுதல்படி நேற்று மதியம் கிராம நிர்வாக அலுவலர் பிரபாகரனை விவசாயி சீனு சந்தித்தார். அப்போது ரசாயன பவுடர் தடவிய 40 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை சீனு பிரபாகரனிடம் கொடுத்தார்.
பணத்தைப் பார்த்ததும் முகமலர்ச்சியுடன் வாங்கிய பிரபாகரன் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தபோது அப்பகுதியில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஏடிஎஸ்பி தேவநாதன் தலைமையிலான போலீசார் கையும் களவுமாக பிரபாகரனை கையும் களவுமாக கைது செய்தனர். மேலும் அவரை அங்கிருந்து நேரடியாக வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று இந்த லஞ்சப்பணம் இன்னும் யார் யாருக்கு கொடுக்க தயாராக இருந்தீர்கள் என்று விசாரணை நடத்தியுள்ளனர்.
இதன் பிறகு அவர் மீது வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைத்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் ஏ டி எஸ் பி தேவநாதன் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அனைத்து துறைகளிலும் லஞ்சம் பெறுபவர்களை தொடர்ந்து கையும் களவுமாக கைது செய்து வருகிறார்கள்.