சேலம் அருகே, டிப்தீரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுவன் உயிரிழந்தான்.
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கே.கே.நகரை சேர்ந்தவர் செல்வம். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சந்திரா. இவர்களுக்கு நான்கு வயதில் ரோகித் என்ற மகன் இருந்தான். ரோகித் தவிர, லத்திகா (12), அஜய் (8) ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர்.
கடந்த மாதம் 27ம் தேதி சிறுவன் திடீரென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். சிறுவனை, ஈ.காட்டூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெற்றோர் கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தொடர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினர்.
இதையடுத்து சிறுவன் ரோகித்தை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீண்டும் 29ம் தேதியன்று பரிசோதனைக்கு வருமாறு கூறினர். ஆனாலும், காய்ச்சல் குறையாததால் வீடு அருகே உள்ள தனியார் கிளினிக் ஒன்றிலும் சிறுவனுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.
இந்நிலையில், அக். 31ம் தேதியன்று ரோகித் மட்டுமின்றி, அவனுடைய அக்காள் லத்திகா (12) அண்ணன் அஜய் (8) ஆகியோரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். மூன்று பேரையும் பெற்றோர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் ரோகித் உயிரிழந்தான். பெற்றோர் மற்றும் ஊர்க்காரர்கள், ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சை அளிக்காததால்தான் சிறுவன் இறந்துவிட்டதாகக்கூறி ஈ.காட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.
மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், இடங்கணசாலை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜ விஜயகணேஷ், மகுடஞ்சாவடி வட்டார மருத்துவ அலுவலர் முத்துசாமி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கூறுகையில், ''சிறுவன் ரோகித், டிப்தீரியா எனும் தொண்டை அடைப்பான் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தான். காய்ச்சல் முற்றிய நிலையில்தான் பெற்றோர் அவனை சிகிச்சைக்கு அழைத்து வந்தனர். சிறுவன் வந்தவுடன் போதிய முதலுதவி சிகிச்சை அளித்து, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கவும் பரிந்துரை செய்தோம்,'' என்றனர்.
முன்னதாக, போலீசார் மற்றும் மருத்துவர்கள் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் சமதானம் அடைந்து, அங்கிருந்து கலைந்து சென்றனர்.