மணிப்பூர் மாநிலத்தில் மெய்டீஸ் எனும் பழங்குடி அல்லாத சமூகத்தினரை பட்டியலின பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக மணிப்பூரில் பிற இனத்தவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி கலவரமாக மாறியது. பழங்குடியினர் பட்டியலில் ஏற்கனவே இருக்கும் நாகா, குக்கி இன மக்கள், மெய்டீஸ் மக்களுக்கு எதிராகப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மணிப்பூர் மாநில வரலாற்றில் மிக மோசமான வன்முறையாக இது உருவெடுத்துள்ளது. தற்போது வரை நடந்த மோதல்களில் 60க்கு மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். இதனால் மணிப்பூர் மாநிலம் பெரும் பதற்றத்தில் உள்ளது.
மணிப்பூரில் சிக்கியுள்ள பிற மாநிலத்தவரை மீட்க ஒவ்வொரு மாநில அரசுகளும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. மணிப்பூரில் மோரே நகரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் வாழ்கின்றனர். கலவரக்காரர்களால் அவர்களது வீடுகளும் கடைகளும் தீக்கிரையாகி இருக்கின்றன. இதன் காரணமாக மணிப்பூரில் பிற மாநிலத்தவரும் மெய்டீஸ் இனக்குழுவினரும் சொந்த நிலத்தை விட்டு அகதிகளைப் போல வெளியேறி வருகின்றனர். வன்முறையை கட்டுப்படுத்தும் நோக்கில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டது. மேலும், 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவையும் அம்மாநில அரசு அமல்படுத்தியது. கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டது. அசாதாரண சூழ்நிலை நிலவுவதால் மணிப்பூரில் இருந்து பிற மாநிலங்களைச் சார்ந்த மக்கள் வெளியேறி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாடு அருப்புக்கோட்டையைச் சேர்ந்த சந்தோஷ்(18), கேவில்பட்டி முருகலெட்சுமி(19), பூந்தமல்லி கார்த்திக்(21), போரூர் விஷால் சீனிவாசன்(18) ஆகியோர் முதல் கட்டமாக அயலக தமிழர் நலத்துறை முயற்சியில் சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அங்கிருந்து தனது சொந்த ஊருக்கு பயணிக்கின்றனர். இது குறித்து சென்னை விமான நிலையத்திற்கு வந்த மாணவர்கள் கூறுகையில், கல்லூரி வாசலில் குண்டு வெடிப்பு நடந்தது. பதற்றமான சூழ்நிலை நிலவுவதாகவும் உணவு, தண்ணீர் இன்றி தவித்த நிலையில் தமிழக அரசு உதவியுடன் மீண்டு தமிழகம் வந்தது மகிழ்ச்சிகரமாக இருப்பதாகத் தெரிவித்தனர்.