கேரளாவில் பெய்த தொடர் மழையால் முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்தது. இதனால் அணையின் நீர்மட்டத்தை உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி 142 அடியாக உயர்த்துவதற்கு தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஆயத்தமான நிலையில், கேரள மாநிலத்தவரின் முட்டுக்கட்டையால் அணையில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி கேரளாவிற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால், வழக்கத்துக்கு மாறாக தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாட்டு அமைச்சர்கள் யாரும் பங்கேற்காமல், கேரள மாநில அமைச்சர்கள் மற்றும் இடுக்கி மாவட்ட ஆட்சியர் பங்கேற்று முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டு விவசாயிகளிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத் தொடர்ந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐந்து மாவட்ட விவசாய சங்கம் சார்பாக லோயர்ஔ கேம்ப் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. அதன்பின் அதிமுக சார்பில் வருகிற 9ஆம் தேதி முல்லை பெரியாறுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட இருக்கிறார்கள்.
இந்நிலையில், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கேரளாவின் தேக்கடியில் உள்ள படகுத்துறைக்கு 11.30 மணிக்கு வந்தார். அவருடன் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் படகு மூலம் முல்லைப் பெரியாறு அணைக்குச் சென்று ஆய்வுசெய்துவருகிறார்கள். அவர்களுடன் எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், ஆண்டிபட்டி மகாராஜன், பெரியகுளம் சரவணக்குமார், மதுரை வடக்கு தளபதி, சோழவந்தான் வெங்கடேஷ், தேனி மாவட்ட ஆட்சியர் முரளிதரன் மற்றும் தமிழ்நாடு பொதுப் பணித்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர். இப்படி திடீரென தமிழ்நாடு அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் அதிகாரிகளும் முல்லைப் பெரியாறு அணைக்கு ஆய்வுசெய்யச் சென்றது கேரளா அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.