
வேப்பூர் அருகே ரயில்வே சுரங்கப்பாதையில் வைக்கப்பட்டிருந்த இரும்பு கிரில் கேட்டுகளைத் திருடி விற்ற 4 இளைஞர்களை கைது செய்த காவல்துறையினர் கடத்துவதற்கு பயன்படுத்திய ஆட்டோவையும், 12 க்ரில்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ளது இலங்கியனூர் ஊராட்சி. இக்கிராமத்தின் வழியாக சேலம் - விருத்தாசலம் ரயில்வே பாதை செல்கிறது. இதில் பெங்களூர் முதல் நாகூர் வரை செல்லக்கூடிய பயணிகள் ரயில் மற்றும் சரக்கு ரயில்கள் அவ்வப்போது சென்று வருகின்றன. இலங்கியனூர் கிராமத்திலிருந்து காச்சக்குடி செல்ல ரயில்வே பாதையைக் கடப்பதற்காக கீழே சுரங்கபாதை அமைக்கப்பட்டுள்ளது. அப்பாதையில் இரும்பு க்ரில் கேட்டுகள் வைக்கப்பட்டிருந்தன. இதனை நோட்டமிட்ட சிலர் அவ்வப்போது ஒவ்வொரு கிரில் கேட்டாக எடுத்து சென்றுள்ளனர். இதை எடுப்பவர்கள் யார் எனத் தெரியாமல் ரயில்வே ஊழியர்கள் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று அப்பகுதியில் பணிபுரியும் ரயில்வே லைன் ஊழியர் முருகன், நல்லூர் பழைய இரும்பு கடைகளில் சோதனை செய்தபோது கண்டபங்குறிச்சி செல்லும் சாலையில் ஒரு கடையில் காணமல்போன 9 இரும்பு கேட்டுகள் லாரியில் ஏற்றப்படுவதைப் பார்த்து, உடனடியாக ஆத்தூர் ரயில்வே காவல்துறைக்கு தகவல் கொடுத்தார்.
அதனடிப்படையில் காவல்துறையினர் வந்து விசாரணை செய்து கொண்டிருந்தபோதே மேலும் 3 இரும்பு ஜன்னல்களைத் தங்களது ஆட்டோவில் ஏற்றி வந்து கொண்டிருப்பதாக கடை உரிமையாளருக்கு திருடியவர்கள் தகவல் கூறினார்கள்.
இவர்களைப் பிடிப்பதற்காக அப்பகுதியில் மறைந்திருந்த காவல்துறையினர் மற்றும் ரயில்வே ஊழியர்கள் ஆட்டோ வந்தவுடன் அதிலிருந்த 4 இளைஞர்களைப் பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் வேப்பூர் அருகிலுள்ள என்.நாரையூர் கிராமத்தை சேர்ந்த அமுதன் (வயது 19), கார்த்திக் (வயது 21), சந்துரு (வயது 18), மணிகண்டன் (வயது 21) எனத் தெரிய வந்தது. அவர்கள் 4 பேரையும் கையும் களவுமாக கைது செய்த காவல்துறையினர் கடத்துவதற்கு பயன்படுத்திய ஆட்டோவையும் 80 ஆயிரம் மதிப்புள்ள 12 க்ரில் கேட்டுகளையும் பறிமுதல் செய்தனர்.