பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்த பிறகு மாணவிகள் சிலர் மாயமாகும் வழக்குகள் ஆண்டுதோறும் காவல்நிலையங்களில் பதிவாகி வருகிறது. இதுபோன்ற வழக்குகளை விசாரிக்கும்போது, காதல் விவகாரம் மற்றும் தேர்வுகளில் மதிப்பெண் குறையும் எனும் அச்சம் காரணமாகவும் மாணவிகள் மாயமாவது கண்டறியப்படுகிறது. 18 வயது பூர்த்தி அடையாதவர்கள் என்பதால் மாயமான மாணவிகள், கடத்தப்பட்டதாக வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.
இந்நிலையில் நடப்பு ஆண்டும், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்த இரண்டே நாளில் நான்கு மாணவிகள் மாயமானதாக சேலம் மாநகர காவல்துறையில் புகார்கள் பதிவாகி உள்ளன. இது, காவல்துறையினர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மாயமானவர்களில் மூன்று பேர் பிளஸ் 2 முடித்தவர்கள் என்பதும் மற்றொரு மாணவி பிளஸ்1 பொதுத்தேர்வு முடித்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், “ஒவ்வொரு மாணவ, மாணவிக்கும் பிளஸ்2 படிக்கும் பருவம் மிகவும் முக்கியமான காலகட்டம். இந்த வயதில் இருக்கும் மகள்களுடன் பெற்றோர்கள் நண்பர்கள் போல பழக வேண்டும். பிள்ளைகளுக்கு ஏற்படும் தேர்வு குறித்தான அச்சங்களையும் அவர்களின் தனிப்பட்ட அச்சங்களையும் மனம் விட்டுப் பேசி அதனைப் போக்க வேண்டும்.
சில சமயங்களில் மாணவிகள் காதல் விவகாரம் தொடர்பாகவும் மாயமாவதுண்டு. படிக்கும் வயதில் காதல் வலையில் விழுந்து விடக்கூடாது என்றும், பிள்ளைகள் நல்லபடியாக படித்து முடித்து உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்றும் காவல்துறை தரப்பிலிருந்து பள்ளிகளுக்கு சென்று மாணவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதேபோல், அவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்தும் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகிறோம். தற்போது சேலம் மாநகரில் மட்டும் கடந்த இரண்டு நாளில் 4 மாணவிகள் மாயமாகி உள்ளனர். அவர்களின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கடத்தப்பட்டதாக வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.