பயிர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள 33 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய பாக்கி காப்பீட்டு தொகையை 12 சதவீத வட்டியுடன் வழங்க கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மழை வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் பிரதம மந்திரி ஃபசல் பீமா யோஜனா எனும் பயிர் காப்பீட்டு திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த திட்டத்தின் கீழ் உரிய பிரீமியம் தொகையை செலுத்திய போதும், முழு காப்பீட்டுத் தொகையை வழங்கவில்லை எனக் கூறி, விவசாயிகள் சட்ட இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், 2016 - 17 ம் ஆண்டில் பருவமழை பொய்த்ததால் பயிர்கள் கருகி நாசம் ஆனதாகவும், அவற்றுக்கு முழு இழப்பீடாக ஹெக்டேருக்கு 62 ஆயிரத்து 500 ரூபாய் வழங்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 25% பயிர் காப்பீடு தொகையை மட்டுமே காப்பீட்டு நிறுவனம் வழங்கியதாகவும், மீதத் தொகையை இதுவரை வழங்கவில்லை எனவும் அந்தத் தொகையை 12 சதவீத வட்டியுடன் வழங்கும்படி உத்தரவிடவும் மனுவில் கோரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மணிகுமார், சுப்ரமணிய பிரசாத் அமர்வு, 4 வார காலத்திற்குள் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டது.