வேலூர் மாவட்டம் கே. வி.குப்பம் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் தயாரிப்பதாக குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து தகவலின் அடிப்படையில் குடியாத்தம் மதுவிலக்கு போலீசார் இன்று கே.வி.குப்பம் அடுத்த மேல்மாயில் சாலையில் ஜெய்பிரகாஷ் என்பவரது வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது குறைந்த விலைக்கு கர்நாடகா மது பாட்டில்களை வாங்கி வந்து போலியாக ராணுவ கேண்டீனில் விற்பனை செய்யப்படும் மது பாட்டில்கள் போல் தயாரித்து விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலி மது பாட்டில்களை தயாரித்த ஜெய்பிரகாஷ், அதை விற்பனை செய்து வந்த விக்னேஷ் மற்றும் விஜய பிரகாஷ், போலி ஸ்டிக்கர்களை தயாரித்துக் கொடுத்த பாலமுருகன் ஆகிய 4 பேரையும் மதுவிலக்கு அமலாக்கப் போலீசார் கைது செய்தனர்.
மேலும், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் அவர்களிடமிருந்து கர்நாடகா மது பாட்டில்கள் மற்றும் போலி ராணுவ மதுபாட்டில், ஸ்டிக்கர்கள், மூடிகள், உள்ளிட்டவற்றையும் பறிமுதல் செய்து இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.