அண்மையில் மிக்ஜாம் புயல் காரணமாகச் சென்னையிலும் அதனைத் தொடர்ந்து பெய்த கனமழை காரணமாகத் தமிழகத்தின் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. குறிப்பாகத் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் ரயிலில் சிக்கிய பயணிகள் அதிகளவில் இரண்டு மூன்று நாட்களுக்குப் பிறகு போராடி மீட்கப்பட்டனர்.
மொத்தமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்குத் தமிழக அரசு பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு இருந்தது. இந்த நிலையில், மழை வெள்ள பாதிப்புகளால் பழுதடைந்த வீடுகளைக் கட்டுவதற்காக 382 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைப் பழுது பார்க்கவும், புதிதாகக் கட்டவும் 382 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 4,577 புதிய வீடுகள் கட்ட ரூபாய் 199 கோடி ரூபாயும், 9,975 வீடுகளைச் சீரமைக்க ரூபாய் 182 கோடியும் ஒதுக்கி அரசாணையானது வெளியிடப்பட்டுள்ளது. புதிதாக வீடு கட்டுவதற்கு ரூபாய் 4 லட்சம் ரூபாயும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு 2 லட்சம் ரூபாயும் வழங்க ஏற்கனவே தமிழக முதல்வர் உத்தரவிட்டிருந்தார். முதல்வரின் உத்தரவுப்படி ஊரக வளர்ச்சித் துறை மூலம் வீடுகளைச் சீரமைக்கவும், புதிதாக வீடுகளைக் கட்டவும் தற்போது நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.