இயேசு கிறிஸ்து பிறந்த டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகையாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டுவருகிறது.
திண்டுக்கல் மாநகரில் மணிக்கூண்டு சர்ச், ராமநாதபுரம் சர்ச் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு திருப்பலி மற்றும் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றன. அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித வியாகுல அன்னை ஆலயத்தில் நள்ளிரவில் பங்குத் தந்தை செல்வராஜ் தலைமையில், உதவி பங்குத் தந்தைகள் பங்கேற்ற சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. இத்திருப்பலியின் நடுவே இரவு சரியாக 12 மணிக்கு விண்ணில் வான் மேகக் கூட்டங்கள் மத்தியிலிருந்து குழந்தை இயேசு பிறப்பது போன்ற காட்சி சிறப்பாக வடிவமைக்கப்பட்டு காண்பிக்கப்பட்டது.
குழந்தை இயேசு பிறக்கும்போது ஆலயத்தில் பக்தர்கள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி ஆரவாரம் செய்து உற்சாகமாக வரவேற்றனர். அதைத் தொடர்ந்து கிறிஸ்தவ மக்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர். இத்திருப்பலியில் திண்டுக்கல் மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் மற்றும் அருட்சகோதரிகள் கலந்துகொண்டனர். திருப்பலி முடிந்த பிறகு நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குக் கேக்குகள் வழங்கி இயேசுவின் பிறப்பைக் கிறிஸ்துமஸ் விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.