தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் நீண்ட நெடிய வரலாறு கொண்டது. தமிழர்களின் ஒவ்வொரு கலாச்சார நிகழ்வுகளையும் மேலோட்டமாக பார்க்கும் போது மூட நம்பிக்கையாக தெரியும். ஆனால் அதனை ஆழ்ந்து பார்த்தால் அர்த்தமுள்ளதாக இருக்கும்.
அப்படியான ஒரு விழா தான் முளைப்பாரித் திருவிழாக்கள். ஒவ்வொரு கிராமத்திலும் விவசாயிகள் தங்களிடம் உள்ள விதைகளை விதைப்பிற்கு முன்பே வீரியமான விதைகள் தானா? விதைக்கலாமா என்பதை ஆய்வு செய்யவே பண்டைய காலம் தொட்டு அம்மன் கோயில் விழாக்கள் என்ற பெயரில் மண் சட்டிகளில் மண் நிரப்பி தானிய விதைகளை தூவி வீட்டுக்குள்ளேயே வைத்து பாதுகாத்து வளர்த்து வருவதும், இதில் நன்றாக வளரும் விவசாயிகளின் வீட்டில் உள்ள விதைகளை மற்ற விவசாயிகள் வாங்கி விதைப்பதும் தான் வழக்கம். இதற்காகத்தான் முளைப்பாரித் திருவிழாக்களை கிராமங்களில் இன்று வரை தொடர்கிறார்கள்.
இப்படி ஒரு திருவிழா தான் புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மேற்பனைக்காடு கிராமத்தில் நடந்துள்ளது. கல்லணை ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள வீரமாகாளியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளில் பாத்திரங்களில் விதை தூவி வளர்த்த முளைப்பாரியை மேலும் மலர்களால் அலங்கரித்து கும்மாயாட்டத்துடன் ஊர்வலமாக தூக்கிச் சென்று மண்ணடித்திடலைச் சுற்றி கல்லணை ஆற்றங்கரை வழியாகச் சென்று பெரிய குளத்தில் ஓரிடத்தில் சுற்றி வந்து குளத்திற்குள் பயிர்களை விட்டுச் சென்றனர். கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வு கொடுத்ததால் இந்த வருட திருவிழா சிறப்பாக அமைந்துள்ளதாக கூறுகின்றனர் இளைஞர்கள்.