ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தின் கீழதஞ்சை என பெயர்பெற்றிருந்த நாகப்பட்டினம் தனி மாவட்டமாக பிரிக்கப்பட்டு 30 ஆண்டுகள் ஆகிவிட்டன. நாகப்பட்டினம் மாவட்டம் 30ஆம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் கொண்டாடும் விதமாக ‘நாகை 30 விழா’ நாகையில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டுவருகிறது. நாகை 30 விழாவை ஐந்து நாட்கள் கொண்டாட திட்டமிடப்பட்டு முதல் நாள் நிகழ்ச்சியினை தமிழ்நாடு டெல்லி சிறப்பு பிரதிநிதியான ஏ.கே.எஸ். விஜயன், நாகை நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசு, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆளூர் ஷாநவாஸ், நாகை மாலி மற்றும் ஆட்சியர் அருண் தம்புராஜ் ஆகியோர் இணைந்து துவக்கிவைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், வேம்பு, மா, பலா, இலுப்பை, நாவல், பாரிஜாதம், உள்ளிட்ட மரக்கன்றுகளை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஏ.கே.எஸ். விஜயன், செல்வராசு ஆகியோர் நட்டு வைத்தனர். பின்னர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளில் செய்தி மக்கள் தொடர்புத் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத்துறை மற்றும் மீன்வளத்துறை சார்பில் வைக்கப்பட்டிருந்த வண்ண மீன்கள் உலர் கருவாடு கண்காட்சியிணையும் பார்வையிட்டனர்.
இதில் செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் அமைக்கப்பட்ட புகைப்பட கண்காட்சியில், கோடியக்கரை பறவைகள் மற்றும் வனவிலங்கு சரணாலயம், நாகை மீன்பிடி துறைமுகம், உம்பளச்சேரி காளை ஆகியவற்றின் சிறப்புகள் குறித்தும் இடம்பெற்றிருந்தன. இதைப்போல், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் காளான் வளர்ப்பு, வேளாண்மைத்துறை சார்பில் இயற்கை முறையில் சாகுபடி செய்யப்பட்ட சீரக சம்பா, மாப்பிள்ளை சம்பா, கருத்தகாரு, ஆத்தூர் கிச்சடி சம்பா உள்ளிட்ட நெல் வகைகளும் இடம்பெற்றிருந்தன. நாகை மண்ணின் 30 ஆண்டுகளின் நினைவுகளைப் பறைசாற்றிய அரங்குகளைப் பொதுமக்கள் வியப்புடன் கண்டு ரசித்தனர்.