
கடந்த 30 ஆண்டுகளாக செய்து வந்த மக்கள் சேவைக்கான பலன், 2026 ம் ஆண்டு தேர்தலில் கண்டிப்பாக கிடைக்கும் என தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் ஈரோடு மாவட்ட அலுவலகத்தின் திறப்பு விழா கருங்கல்பாளையம் அருகில் இன்று நடைபெற்றது. அக்கட்சியின் ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் பேக் (Bag) உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதையடுத்து வீரப்பன்சத்திரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், 'தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வந்தாலும், மிக சிறந்த செயல்பாடுகள் கொண்ட மாவட்டம் ஈரோடு மாவட்டம் என்றும், தமிழக வெற்றிக் கழகத்தின் 3 அலுவலகத்தை ஈரோட்டில் திறந்து வைத்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நான் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது கூட, இதுபோன்ற ஒரு கூட்டத்தைக் கூட்டுவதற்கு பல்வேறு பிரச்சனைகளுடன் சேர்த்து குறைந்தது 15 நாட்களாவது ஆகும். ஆனால் இன்று விஜய் என்ற ஒற்றை பெயருக்காக இளைஞர்கள் உட்பட அனைத்து மக்களும் திரண்டு வந்துள்ளனர்''என்றார்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய புஸ்ஸி ஆனந்த், ''தலைவர் விஜய்யின் அறிவுரைப்படி தமிழக வெற்றிக் கழகத்தின் கட்டமைப்பு பணிகள் செய்து வருகிறோம்.விஜய் எப்போது மக்களை சந்திப்பார் என்பது குறித்து முறையாக அறிவிப்பு வரும். தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு குறித்து விஜய்யே அறிவிப்பார். மாநாட்டு நடைபெறுவதற்கான இடம் தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் சேவை பணி செய்து வருவதால், வரும் 2026 ம் ஆண்டு தேர்தலில் சேவைக்கு உண்டான பலன் எங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்'' என்றார்.