மத்திய ரிசர்வ் வங்கி ரூ.10 நாணயங்களை 2005ல் அறிமுகம் செய்து 2009ல் அதைப் புழக்கத்தில் விட்டது. இந்த 10 ரூபாய் நாணயங்கள் பல்வேறு வடிவமைப்புகளில் இருந்த காரணத்தால் 10 ரூபாய் நாணயத்தில் போலிகள் இருப்பதாகச் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. அதேபோல், இந்த நாணயங்களே செல்லாது எனவும் கூறப்பட்டது. அதனால், இந்த நாணயங்களை இரண்டாம் கட்ட நகரங்கள் மற்றும் கிராமப்புறங்களில் கடைகள் மற்றும் பேருந்துகளில் வாங்குவது மிக மிக குறைவு. இதனால், வாடிக்கையாளர்கள் அவதிப்பட்டு குற்றச்சாட்டு வைத்து வந்தனர்.
இதையடுத்து, மத்திய ரிசர்வ் வங்கி இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 10 ரூபாய் நாணயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வந்தன. இருப்பினும், இந்த நாணயங்களை வாங்க பலரும் தயங்கி வந்தனர். இந்த நிலையில் தான் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என மக்கள் மத்தியில் பரவலான ஒரு எண்ணம் உள்ளது. இது தொடர்பாக மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு அறிக்கைகளை அளித்தபோதும் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்று பொய்யான தகவல் பரவிய வண்ணம் உள்ளது.
பல கிராமங்களில் உள்ள கடைகளில் இந்த நாணயங்கள் மறுக்கப்பட்டு வருகிறது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட 14 வகையிலான 10 ரூபாய் நாணயங்களும் செல்லும். அவற்றை செல்லாது எனக் கூறுவதோ அதனைப் பணப்பரிமாற்றத்தின் போது வாங்கவோ அல்லது கொடுப்பதோ மறுப்பது சட்டப்படி குற்றமாகும். மேலும், இந்திய தண்டனைச் சட்டம் 124ஏ-இன் படி ஒருவர் இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுத்தால் அது சட்டப்படி குற்றம். அந்த குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும். மேலும், இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுக்கும் நபர் அல்லது கடையின் மீது புகார் அளித்தால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.