Published on 06/10/2021 | Edited on 06/10/2021
சேலம் மாவட்டம், ஜலகண்டாபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில், ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி, வெளி மாநிலங்களுக்கு கடத்துவதாக ஜலகண்டாபுரம் காவல் நிலையத்திற்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து காவல்துறை எஸ்.ஐ. பூபதி மற்றும் காவலர்கள் அக். 3ஆம் தேதி இரவு ஜலகண்டாபுரம் & நங்கவள்ளி சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். சூரப்பள்ளி அருகே வந்த மினிடோர் ஆட்டோவை நிறுத்தி சோதனை நடத்தியபோது, அதில் தலா 45 கிலோ எடைகொண்ட 65 மூட்டைகளில் 3 டன் ரேஷன் அரிசி கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அரிசியுடன் வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். மினிடோர் ஆட்டோவில் வந்த தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் (வயது 43), ஜெயராமன் (வயது 43), சரவணன் (வயது 50) ஆகிய மூவரிடமும் விசாரணை நடத்திவருகின்றனர்.