மணல் குவாரிகளில் நடந்த முறைகேடுகள் குறித்து அமலாக்கத்துறையினர் கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டத்தில் சோதனையில் ஈடுபட்டனர். முத்துப்பட்டினம் மணல் ராமச்சந்திரன், சர்வேயர் திண்டுக்கல் ரெத்தினம், கரிகாலன் ஆகியோர் வீடுகள், அலுவகங்கள், உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவகங்கள், ஆடிட்டர் அலுவலகம் உள்பட ஏராளமான இடங்களில் மூன்று நாட்கள் வரை தங்கி இருந்து சோதனை செய்து கட்டுக்கட்டாக ஆவணங்களைக் கைப்பற்றிச் சென்றனர். இதனால் மணல் குவாரிகள் நிறுத்தப்பட்டது.
மணல் குவாரிகளில் ஆய்வுகள் செய்த அமலாக்கத்துறையினர் ஏற்கனவே கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில் ஒவ்வொரு குவாரிக்கும் சென்று அரசு அனுமதிக்கப்பட்ட அளவை விட எத்தனை சதவீதம் கூடுதலாக மணல் திருடப்பட்டுள்ளது என்பதை ட்ரோன் கேமராக்கள் மூலமும், நவீன நில அளவை கருவிகள் மூலமும் அளந்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை காலை சிஆர்பிஎஃப் வீரர்களுடன் வந்த அமலாக்கத்துறையினர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவில் தாலுகா ஆமஞ்சி மணல் குவாரி, பெருநாவலூர் மணல் குவாரி ஆகிய இடங்களில் ஆய்வு செய்து ட்ரோன்கள் மூலம் சோதனை செய்தனர். ஆமஞ்சியில் மணல் குவியலை ஆய்வு செய்தனர். தொடர்ந்து கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு நிறுத்தப்பட்ட மணமேல்குடி அருகே உள்ள பானாவயல் பழைய மணல் குவாரிக்கு சென்று நீண்ட நேரம் ஆற்றுக்குள் இறங்கி அளவீடு செய்து ட்ரோன் மூலம் வீடியோ பதிவு செய்து கொண்டனர்.
சுமார் 10 மணி நேரம் வரை சோதனை நடந்தது. இந்த குவாரிகளில் பல ஆயிரம் மடங்கு கூடுதாக மணல் திருட்டு நடந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆய்வறிக்கை சமர்பிக்கும் போது தெரிய வரும். இந்த குவாரிகளை மணல் ராமச்சந்திரன் மூலம் உள்ளூர் அரசியல் பிரமுகர் நடத்தியுள்ளார் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து உள்ளூர் திமுக பிரமுகர் வீடு, அலுவலகங்களிலும் சோதனை நடத்தப்படலாம் என்கின்றனர்.