திருச்சி செந்தண்ணீர்ப்புரம் லால்பகதூர் சாஸ்திரி தெருவைச் சேர்ந்தவர் செந்தில்(டிரைவர்). இவரது மனைவி ரயில்வேயில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர்களது மகள் இனியா(வயது 19 ) பிளஸ் 2 முடித்துள்ளார். இந்த நிலையில் டிரைவர் செந்தில் வேலைக்கு சென்றுவிட்டு பின்னர் பணி முடிந்து வீட்டுக்கு திரும்பியபோது வீட்டில் மகள் இனியாவைக் காணவில்லை. எங்கு தேடியும் மாணவி கிடைக்காததால் சந்தேகம்டைந்த பெற்றோர் பொன்மலை காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருச்சி பாலக்கரை ஆலம்தெரு குட்ஷெட் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவருக்கு ரேவதி(15) என்ற மகள் உள்ளார். இந்த நிலையில் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ரேவதி ஒரு பாடத்தில் தேர்ச்சி பெறவில்லை. இதனால் மன உலைச்சலில் இருந்த மாணவி வீட்டை விட்டு வெளியே சென்றவர் இரவு வீடு திரும்பவில்லை. இது குறித்து பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
மற்றொரு சம்பவத்தில் திருச்சி தென்னூர் அண்ணா நகரைச் சேர்ந்த என்ஜினீயர் மாதேஷ் குமார் என்பவரைக் காணவில்லை என அவரது சகோதரர் ஸ்ரீதர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தில்லைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.