நெல்லையின் மேலப்பாளையம் அருகேயுள்ள மேலநத்தம் செல்கிற சாலையில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி உள்ளது. அக்கம்பக்கமுள்ள பகுதிகளின் சுமார் 900 மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். அப்பகுதியைச் சேர்ந்த குதுபுதீன் நஜீம் என்பவர் அப்பள்ளியின் தாளாளராக உள்ளார். காதர் அம்மாள் பீவி இந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வருபவர்.
இந்நிலையில், தாளாளர் குதுபுதீன் சில மாணவிகளை தனது அறைக்கு வரவழைத்து உடல் வலிப்பதாகக் கூறி கை கால்களை அமுக்கிவிடுமாறு கூறி பாலியல் தொந்தரவு அளித்து வந்ததாகச் சொல்லப்படுகிறது. மேலும், நடந்ததை வெளியே சொன்னால் ஃபெயில் ஆக்கிவிடுவதாக அவர்களை மிரட்டியும் வந்துள்ளாராம். இச்சூழலில் கடந்த 4ம் தேதியன்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த மூன்று மாணவிகளை தனது அறைக்கு வரவழைத்த தாளாளர் பாலியல் தொல்லை கொடுத்தாகத் தெரிகிறது. இதனால் பீதியடைந்த மாணவிகள் சகமாணவிகளிடம் தெரிவிக்க, அதிர்ந்து போன மாணவிகள் நியாயம் கேட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். மேலும், பாலியல் தொந்தரவு சம்பவம் மூன்று மாதங்களாக நடந்ததாகவும் தகவல்கள் கசிகின்றன.
மாணவிகளின் உள்ளிருப்பு போராட்டம் பற்றி அறிந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் முஸ்லீம் அமைப்பினர் திரண்டு வந்து நடவடிக்கை கோரி பள்ளியை முற்றுகையிட்டனர். சம்பவ இடம் வந்த மாநகர கிழக்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன், பாளை தாசில்தார் ஆனந்த பிரகாஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருப்பதி, இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் உள்ளிட்டோர் முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்று பொதுமக்கள், முஸ்லிம் அமைப்புகள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
இது குறித்து பாளை மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகாரையடுத்து இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி உள்ளிட்ட போலீசார் பள்ளியின் தாளாளர் குதுபுதீன் நஜீமை பிடித்து விசாரணை நடத்தியதின் அடிப்படையில் தாளாளர் குதுபுதீன் நஜீம், அவருக்கு உடந்தையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியர் காதர் அம்மாள் பீவி, தாளாளரின் மனைவி உட்பட மூன்று பேர் மீது போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து ரிமாண்ட் செய்தனர். இந்த சம்பவத்தால் பரபரப்பாகக் காணப்பட்ட மேலப்பாளையம் பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பை மேற்கொண்டுள்ளனர்.