Skip to main content

டெட்டனேட்டர் வெடித்து 3 பேர் பலி; சோதனையின் போது ஏற்பட்ட விபரீதம்

Published on 18/02/2023 | Edited on 18/02/2023

 

3 passed away in Tenkasi detonator blast

 

தென்காசி மாவட்டத்தின் ஆலங்குளம் அருகேயுள்ள புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பால். இவர் தனக்குச் சொந்தமான ஊருக்கு மேற்புறமுள்ள இடத்தில் புதிய கிணறு தோண்ட முடிவு செய்து, காளத்திமடத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரிடம் குத்தகைக்கு விட்டிருக்கிறார். கடந்த ஒரு மாதமாக கிணறு தோண்டும் பணி நடந்திருக்கிறது. 15 அடி ஆழம் கிணறு தோண்டப்பட்ட நிலையில் கீழே இறுகலான பாறை தென்படவே தோண்ட சிரமப்பட்டிருக்கின்றனர்.

 

இதனையடுத்து பழக்கப்படி பாறைகளை வெடி வைத்து தகர்க்க முடிவு செய்தனர். நேற்று காலை தொழிலாளிகளான ஆசீர் சாலமோன் (26) அரவிந்த் (24) ராஜலிங்கம் (56) அவரது மகன் மாரிச்செல்வம் (27) ஆகியோர் சேர்ந்து கிணற்றின் மேல் பகுதியில் அமர்ந்து பாறைகளைப் பிளக்கிற ஹெவி டெட்டனேட்டர்களை வைப்பதற்காக சோதனை செய்திருக்கிறார்கள். அது சமயம் சற்றும் எதிர்பாராமல் டெட்டனேட்டர்கள் வெடித்துச் சிதறியிருக்கிறது. இந்த விபத்தில் அரவிந்த் சம்பவ இடத்திலேயே பலியாக ஆசீர் சாலமோன், ராஜலிங்கம், மாரிச்செல்வம் ஆகியோர் படுகாயமடைந்தனர்.

 

தகவலறிந்த தென்காசி ஏ.டி.எஸ்.பி. சார்லஸ் கலைமணி, தடயவியல் இயக்குநர் ஆனந்தி, ஆலங்குளம் வட்டாட்சியர் (பொறுப்பு) ஒசன்ன பெர்னான்டோ, ஆலங்குளம் டி.எஸ்.பி.சகாய ஜோஸ் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கிறார்கள். காயமடைந்த ஆசீர் சாலமோன் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் இறந்தார். ராஜலிங்கம் நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிற வழியில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது. இதனால் பலி எண்ணிக்கை மூன்றானது. படுகாயமடைந்த மாரிச்செல்வம் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சையிலிருக்கிறார். போலீசார் விசாரணையை மேற்கொண்டனர் வெடி விபத்து தொடர்பாக காண்ட்ராக்டரும் குத்தகைதாரருமான சக்திவேலை ஆலங்குளம் போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

3 passed away in Tenkasi detonator blast

 

அரசின் விதிப்படி கிணறு தோண்டுவதற்கான முன் அனுமதியை ஒன்றிய அலுவலகத்தில் முறைப்படி பெறவில்லை. விதியும் மீறப்பட்டுள்ளன. இறுகலான பாறைகளைப் பிளப்பதற்காக ஏற்கனவே தோண்டப்பட்ட குழிகளில் வைக்கப்பட்ட டெட்டனேட்டர்களில் மூன்று டெட்னேட்டர்கள் மட்டும் வெடிக்கவில்லையாம். மற்றவை வெடித்துள்ளனவாம். அதுபோன்ற சம்பவம் நடந்து விடக்கூடாது என்பதற்காக நேற்று முன்தினம் காலை (பிப் 16) டெட்டனேட்டர்களை குழிகளில் வைப்பதற்கு முன்பாக நான்கு பேரும் டெட்னேட்டர்களை சோதனை செய்து பின் வைக்க வேண்டும் என்ற திட்டத்தில் விபரீதம் புரியாமல், கிணற்றின் மேல் பகுதியில் சிறிய பேட்டரி உதவியுடன் சோதனை செய்திருக்கிறார்களாம். இந்த விபரீத சோதனையில் தான் பேட்டரியின் இணைப்பு பட்டு திடீரென டெட்டனேட்டர்கள் மொத்தமாக வெடித்து பெரிய விபரீதம் ஏற்பட்டுவிட்டது என்கிறார்கள் விசாரணை அதிகாரிகள். வெடி விபத்தில் இறந்தவர்கள் உடலைப் பார்த்து உறவினர்கள் கதறியழுதது சோகத்தையும் துக்கத்தையும் ஏற்படுத்தியது. விபரீத சோதனை பேராபத்தில் முடிந்திருக்கிறது. 

 

 

சார்ந்த செய்திகள்