ஏற்காட்டில் பிரபலமான தனியார் பள்ளியின் விடுதிக்குள் புகுந்து பிளஸ்2 மாணவர்களை தாக்கியது தொடர்பாக நெல்லையைச் சேர்ந்த மேலும் 3 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் பிரபல தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டு விழாவின்போதும், ஆதரவற்றோர்களுக்கு உதவுவதற்காக உணவுப்பொருள்கள் ஏலம் விடப்பட்டு நிதி திரட்டப்படும். அதன்படி, ஆக. 6ம் தேதி, பள்ளியில் தயாரிக்கப்பட்ட கேக்கை ஏலம் விட்டனர். அப்போது பத்தாம் வகுப்பு மாணவர்கள் அந்த கேக்கை 20 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தனர். இது தொடர்பாக ஏலம் எடுத்த மாணவர்களுக்கும், பிளஸ்2 மாணவர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.
அப்போது ஏற்பட்ட தகராறில் பிளஸ்2 மாணவர்கள் கேக்கை ஏலம் எடுத்த மாணவர்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். இதில் தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு மாணவருக்கு பலமான காயம் ஏற்பட்டது. அந்த மாணவன் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து சென்னையில் வேலை செய்து வரும் தனது அண்ணன் மாணிக்கராஜாவிடம் கூறியுள்ளார். அவர், நெல்லையில் உள்ள தனது உறவினர்களை அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்றார். அங்கு விடுதிக்குள் புகுந்து தம்பியை தாக்கிய மாணவர்களை சரமாரியாக தாக்கினர். இதில் மூன்று மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக ஏற்காடு காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். முதல்கட்டமாக ஆக. 16ம் தேதி இருவரை கைது செய்தனர். தலைமறைவான மாணிக்கராஜா உள்பட 7 பேரை தேடி வந்தனர். இந்நிலையில் கடம்பூரைச் சேர்ந்த கருப்பசாமி மகன் ஐயனார் (29), நெல்லைச் சேர்ந்த முத்துக்கிருஷ்ணன் மகன் மகாராஜா (24), சுப்பையா மகன் பொன் கணேஷ் (21) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். கைதான மூன்று பேரையும் நீதிமன்ற உத்தரவின்பேரில் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் சிலரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.