Skip to main content

சீட்டாட்ட கும்பலிடம் 3 லட்சம் பறிப்பு; பங்கு போட்டுக்கொண்ட போலீசார்

Published on 26/09/2024 | Edited on 26/09/2024
nn

சீட்டாட்ட கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.3 லட்சத்தைப் பங்கு போட்ட போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் நிகழ்ந்துள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் வெங்கடசாமி. அதே போலீஸ் நிலையத்தில் சிறப்புப் பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வருபவர் இளங்கோவன். இருவரும் தாளவாடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அங்கு ஒரு சீட்டாட்ட கும்பலை போலீசார் சுற்றி வளைத்தனர். போலீசாரை கண்டதும் அந்த கும்பல் ஓடிவிட்டது. அவர்களில் சிலரை பிடித்த போலீசார் சீட்டாட்டத்திற்காக வைத்திருந்த ரூ.3 லட்சத்தை பறித்துக் கொண்டு அவர்கள் மீது எந்த வழக்கையும் பதிவு செய்யாமல் தப்பவிட்டனர். பறிமுதல் செய்த பணத்தை அவர்களே பங்கு போட்டுக் கொண்டதாக தெரிகிறது. இது தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணையில் சீட்டாட்ட கும்பலிடம் இருந்து பணம் பறித்தது உண்மை என்பது தெரிய வந்ததை அடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடசாமி, சிறப்பு பிரிவு ஏட்டு இளங்கோவன் ஆகிய இரண்டு பேரையும் ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்து எஸ் பி ஜவகர் உத்தரவிட்டார்.

இது குறித்து எஸ்.பி ஜவஹர் கூறும்போது, 'இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கருதப்படும் இருவரும் தற்போது ஆயுதப்படை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக துறை ரீதியான விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணை முடிவில் தான் சம்பந்தப்பட்ட போலீசார் மீது எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து தெரிவிக்கப்படும்' என்று கூறினார்.

சார்ந்த செய்திகள்