ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறை சிப்காட் வளாகத்தில் ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இத்தொழிற்சாலைகளில் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். பெருந்துறை பனிக்கம்பாளையம், தோப்புபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், வடமாநில தொழிலாளர்கள் என்ற பெயரில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் பாஸ்போர்ட் இல்லாமல் சட்டவிரோதமாக தங்கி இருப்பது போலீசில் பிடிபடுவதும் வாடிக்கையாக இருந்து வருகின்றது. இந்நிலையில் பனிக்கம்பாளையம், சென்னிவலசு ஆகிய இடங்களில் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக தமிழக கியூ பிரிவு மற்றும் மத்திய உளவு பிரிவு(ஐபி) ஆகியோருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து பெருந்துறை போலீசாருடன் இணைந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் பனிக்கம்பாளையத்தில் தங்கி இருந்த ரப்பானிகாஜி என்பவரது மகன் ஹோசன் எம்டி நஜ்மல்(23), சென்னிவலசு பகுதியில் தங்கி இருந்த சாகிதுல் இஸ்லாம்(42), பாபிகாஜி(34) ஆகிய 3 பேரை நேற்று இரவு பெருந்துறை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் கடந்த பல மாதங்களாக பெருந்துறையில் தங்கி டைல்ஸ் ஒட்டுதல் உள்ளிட்ட கட்டுமான தொழில்களில் ஈடுபட்டு வந்தது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.