வேலூர் மாவட்டம் ஒடுக்கத்தூர் குருவராஜபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பரந்தாமன்(42), இவர் அதே பகுதியில் பேருந்து நிலையம் பின்புறம் டிவி, பிரிட்ஜ், வாஷிங்மெஷின் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்களை வைத்து பர்னிச்சர் கடை நடத்தி வருகிறார். இவர் நாள்தோறும் காலை 10 மணிக்கு தனது கடையை திறந்து இரவு 9 மணிக்கு மூடிவிட்டு செல்வார்.
இந்நிலையில் நேற்று முன்தினமும் வழக்கம்போல் இரவு கடையை அடைத்து விட்டு சென்றுள்ளார். பின்னர் மீண்டும் நேற்று கடையைத் திறந்த போது ஷட்டர் உடைக்கப்பட்டு கல்லாவில் இருந்த பணம் திருடு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பரந்தாமன் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நள்ளிரவில் 3 சிறுவர்கள் கடை அருகே வந்து அங்கிருந்த ஷட்டரை உடைத்து அதில் ஒரு சிறுவன் உள்ளே நுழைந்து கல்லா பெட்டியில் வைத்திருந்த ரூ.25 ஆயிரத்தை திருடிச் சென்றது பதிவாகி இருந்தது.
இதுகுறித்து கடை உரிமையாளர் பரந்தாமன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு கடையின் ஷட்டரை உடைத்து பணத்தை திருடிச் சென்ற சிறுவர்களை வலை வீசி தீவிரமாக தேடி வருகின்றனர். ஒடுகத்தூர் அருகே நள்ளிரவில் பர்னிச்சர் கடையின் ஷட்டர் உடைத்து சிறுவர்கள் கல்லா பெட்டியில் வைத்திருந்த பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.