நாடு முழுவதும் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் வடகிழக்கு மாநிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அசாம், பீகார், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மட்டும் சுமார் 1 கோடி மக்கள் வீடுகளை இழந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக தென் மாநிலங்களில் கடந்த சில தினங்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலம் கபினி அணையிலிருந்து தமிழகத்துக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. அதன் காரணமாக கோவை மாவட்டம், பவானி, பில்லூர் அணைகளில் திறக்கப்படும் அதிகளவு உபரிநீரால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
அதே போல் கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால், கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.அதனை தொடர்ந்து தேனி, மதுரை உள்ளிட்ட சுற்று வட்டார மாவட்டங்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும், முல்லை பெரியார் அணையின் நீர் மட்டம் 120 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு நீர்வரத்து 16,990 கனடியாகவும், குடிநீருக்காக நீர்திறப்பு 900 கனஅடியாக உள்ளது. முல்லை பெரியார் அணையின் நீர் மட்டம் உயர்ந்துள்ளதால், தமிழக பொதுப்பணித்துறை ஆய்வு செய்து வருகின்றனர்.