தமிழகத்திலிருந்து இருந்து வட மாநிலங்களுக்கு செல்லும் ரயில்களின் டிக்கெட்டுகளை கணினி மென்பொருளை பயன்படுத்தி ஒரே நிமிடத்தில் 24 தக்கல் டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்து கூடுதல் விலைக்கு விற்று வந்த மோசடி வடமாநில நபரை போலீசார் அதிரடியாக கைது செய்யதுள்ளனர்.
பண்டிகை காலங்களில் சென்னையிலிருந்து வட மாநிலங்களுக்கும், தென் மாவட்டங்களுக்கும் செல்வதற்காக பயணிகள் முண்டியடித்துக்கொண்டு பேருந்தோ, ரயிலோ எப்படியேனும் சென்று விடுவதற்காக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வது வழக்கமான ஒன்று. இப்படி முன்பதிவு செய்யும் வேலையை மூன்று மாதத்துக்கு முன்னரே ஆரம்பித்து விடுகின்றனர் பயணிகள். இப்படி இருக்கையில் ஒரு மென்பொருளை பயன்படுத்தி ஒரே நிமிடத்தில் மோசடியாக 24 ரயில் டிக்கெட்டுகள் வரை முன்பதிவு செய்து அதன் மூலம் லட்சக்கணக்கில் மோசடி செய்து சம்பாரித்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் பை பை என்ற டிராவல்ஸ் நிறுவனத்தை நடத்தி வரும் மேற்கு வங்கத்தைச் சேர்ந்த தீபக் என்பவர் போலீசாரிடம் சிக்கியது தனிக்கதை. சென்னையில் அமைந்துள்ள சென்ட்ரல் மற்றும் எக்மோர் ரயில்நிலைய பகுதிகளைவிட இவருடைய கடையில்தான் கூட்டம் அலைமோதும். சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் அப்பல்லோ மருத்துவமனைக்கு எதிரே சுமார் 20க்கும் மேற்பட்ட டிராவல்ஸ் நிறுவனங்கள் இயங்குகின்றன. அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சை பெற வருபவர்களும் மற்றும் அவசரமாக ஊர் திரும்ப நினைக்கும் வசதிபடைத்த பயணிகளை இவர்கள் இலக்காகக் கொண்டு இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.
தட்கல் ரயில் டிக்கெட் வேண்டுமா உடனே அங்கு உள்ள டிராவல்ஸ் நிறுவனத்தை அணுகினால் கிடைத்துவிடும். இதுபோன்று கடந்த ஒன்றரை வருடங்களாக முழு நேர வேலையாக செய்து வந்திருக்கிறார் தீபக். இது தொடர்பாக ரயில்வே எழும்பூர் ஊழல் கண்காணிப்பு பிரிவுக்கு புகார்கள் குவிந்ததால் கடந்த சனிக்கிழமை டிக்கெட் வாங்குவது போன்று பேச்சு கொடுத்து போலீசார் தீபக்கை சுற்றிவளைத்தனர்.
அங்கு நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் ஆதாரங்களுடன் சிக்கியுள்ளன. ஏ எஸ் எம் எஸ் என்ற கணினி மென்பொருளை தனது லேப்டாப்பில் பதிவிறக்கம் செய்து வைத்துள்ள தீபக். அந்த மென்பொருளை பயன்படுத்த ஒரு குழுமத்தில் தன்னை உறுப்பினராக இணைத்துக் கொண்டு மொத்தம் 2500 ரூபாய் உறுப்பினர் கட்டணமாக செலுத்தி அந்த மென்பொருளை பயன்படுத்தி உள்ளார். இந்த மென்பொருளானது ஆன்லைனில் மோசடியாக அதிவேகத்தில் தட்கல் டிக்கெட்டுகளை இடைமறித்து முன்பதிவு செய்து வந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
டிக்கெட் கேட்டு வரும் பயணிகளிடம் டிக்கெட்டிற்கு உரிய கட்டணத்தை வசூலித்து கொண்டு விவரங்களையும் பெற்று விடுவார். தட்கல் டிக்கெட் முன்பதிவு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே ரயில்வே இணையதளமான ஐஆர்சிடிசியில் அனைவரின் பெயருக்கும் தனித்தனியாக டிக்கட் போர்ட் தயார் செய்து வைத்துக் கொள்வார். முன்பதிவு தொடங்கிய ஒரு நிமிடத்தில் இவர் விண்ணப்பித்த பயணிகளுக்கு மட்டும் விரைவாக பயணச்சீட்டு ஒப்புதல் கிடைத்துவிடும். அந்த பயணச்சீட்டுகளை இரு மடங்கு விலைக்கு சம்பந்தப்பட்ட பயணிகளிடம் விற்பனை செய்து விடுவார். அந்த வகையில் இவர் அண்மையில் 5 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள 141 டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ளதை போலீசார் கண்டறிந்துள்ளனர்.
அவர் முன்பதிவு செய்து வைத்திருந்த 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 14 பயணச்சீட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். அதேபோல் அவரது நிறுவனத்தில் இருந்த முன்பதிவு செய்ய பயன்படுத்தி வந்த மடிக்கணினி, பிரிண்டர், மொபைல் போன்றவற்றையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தீபக்கை கைது செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.