திருநர் சமூகத்தினை இச்சமூகம் பார்க்கும் பார்வை முற்றிலும் முரணானது என்பதை எடுத்துரைக்கும் விதமாக கடந்த 2018 ஆம் ஆண்டு “சண்டக்காரி” எனும் நாடகத்தை திருநர் கூட்டு இயக்கத்தினர் நடத்தினர். இந்தாண்டும் அதே போல “சண்டக்காரங்க” சுதந்திரப் போராளிகள் எனும் நாடகம் வரும் 23 ஆம் தேதி மாலை ஆழ்வார்பேட்டையில் உள்ள மேடை அரங்கத்தில் நடைபெறுகிறது.
திருநர் சமூகம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20 ஆம் தேதி, உயிர் நீத்த திருநர்களை நினைவு கூறும் தினமாக அனுசரித்து வருகிறார்கள். இதையொட்டி சமூகத் தீண்டாமை மற்றும் குடும்பத் தீண்டாமையால் கொலை மற்றும் தற்கொலை செய்து இறந்த திருநர்களின் நினைவாக; நியாயம் கேட்கும் விதமாக பாலின சுதந்திரத்துக்கான ‘சண்டக்காரங்க’ எனும் நாடகத்தை திருநர்களே எழுதி, இயக்கி, நடிக்க உள்ளனர்.
கடந்த ஆண்டு அரங்கேற்றப்பட்ட நாடகத்தில், திருநங்கைகள் ஒவ்வொருவரும் ஒரு பொறியாளராக, சித்த மருத்துவராக, காவல்துறை உதவி ஆய்வாளராக, சமூக சேவகராக தங்கள் நிலைகளை உயர்த்திக் கொண்டதோடு, தங்களைச் சார்ந்த ஒவ்வொருவரின் வளர்ச்சிக்கான தீர்வாகக் கல்வியையும் அதன் மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பு எனும் ஆயுதத்தையும் ஏந்தத் தொடங்கியிருக்கிறார்கள். அதில் வருவதற்கான பாதை எப்படிப்பட்டது என்பதையும் இந்தச் சமூகத்தின் கோரமுகத்தையும் அவர்களின் உச்ச நடிப்பில் ஒருமித்த குரலோடு வெளிப்படுத்தியிருந்தனர். இந்தாண்டு அதே போல குடும்பத் தீண்டாமை, சமூகத் தீண்டாமை இவ்விரண்டாலும் கொலையும் தற்கொலைகளும் நிகழ்ந்த வண்ணம் இருப்பதால் அதைச் சார்ந்தே கதை இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. இதை நேகா என்பவர் எழுத்தி இயக்கவுள்ளார். இதில், ஆடை வடிவமைப்பு ப்ராஸி செய்கிறார்.
இது குறித்து திருநங்கை கிரேஸ் பானுவிடம் பேசியபோது, “ஒவ்வொரு ஆண்டும் திருநர்களின் இறப்பு என்பது உயர்ந்து கொண்டே செல்கிறது. அந்த இறப்புகளைத் தடுப்பதற்கான கதைக் களத்தில் இந்த நாடகத்தை நிகழ்த்த இருக்கிறோம். திருநர் சமூக மக்களுக்கு கல்விச்சூழல் எவ்வளவு பாதுகாப்பானதாக இருக்க வேண்டும் என்பதையும் காட்சிப்படுத்த உள்ளோம். திருநர் மக்களின் பாதுகாப்பையும் கல்வியையும் உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமையாக உள்ளது. அதே போல அனைத்துத் துறையிலும் எதிர்காலத்தில் திருநர் மக்களின் பங்களிப்பை உறுதி செய்திட இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த வேண்டும். இறந்து போன திருநர் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என உணர்த்தும் வகையில் இக்கதை அமைந்துள்ளது” என்றார்.