குறிஞ்சிப்பாடி அருகே 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை -செய்தவருக்கு 22 வருடம் சிறைத் தண்டனை விதித்து கடலூர் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குறிஞ்சிப்பாடி அருகே உள்ள விருப்பச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் அப்பாஸ்(23). கூலித் தொழிலாளி. இவர் அதே பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியுடன் பழகி வந்தார். இந்நிலையில் கடந்த 14.05.2020 ம் தேதி ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதுபோல பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமானார். இது அவரது பெற்றோருக்கு தெரிந்து அவரை திட்டி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கர்ப்பத்தை கலைத்து விட்டு சிறுமியை வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
கர்ப்பத்தை கலைத்தது ஊர் முழுவதும் தெரிந்தால் அவமானம் தாங்காமல் கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் அந்த சிறுமி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகாரின் பேரில் நெய்வேலி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கடலூர் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி லட்சுமி ரமேஷ் தீர்ப்பளித்தார். இதில் குற்றவாளி அப்பாஸ் என்றும் அவருக்கு 22 வருடம் கடும் காவல் தண்டனையும், ரூ 1 லட்சத்து 5 ஆயிரமும் அபராதம் விதித்தும், அபராதத் தொகையை கட்ட தவறினால் 3 வருடம் சிறைத் தண்டனையும் விதித்துத் தீர்ப்பளித்தார். பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசின் ஏதாவது ஒரு திட்டத்தில் ரூ. 4 லட்சம் வழங்கிடவும் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் அப்பாஸை கடலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர். இதில் அரசு தரப்பு வழக்கறிஞராக ஜோதிரத்தினம் ஆஜரானார்.