மகாராஷ்டிரா மாநிலத்தில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை இணைந்து கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. இந்தக் கூட்டணி ஆட்சியில் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக இருந்து வந்தார். இந்நிலையில், சிவசேனாவில் ஏற்பட்ட உட்கட்சி பிரச்சனையால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான 40க்கும் மேற்பட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் அணி திரண்டு உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக செயல்பட்டனர்.
இதையடுத்து, சிறப்பு சட்டப்பேரவையைக் கூட்டி பெரும்பான்மையை நிரூபிக்க உத்தவ் தாக்கரேவுக்கு அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டிருந்தார். பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத நிலையில் அதற்கு முன்னதாகவே தனது முதலமைச்சர் பதவியை உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார். இதையடுத்து, பா.ஜ.க.வின் ஆதரவுடன் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பதவியேற்றுக் கொண்டார். துணை முதல்வராக பாஜகவை சேர்ந்த தேவிந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்று கொண்டார். இதனைத் தொடர்ந்து சிவசேனா கட்சியும், சின்னமும் ஏக்நாத் ஷிண்டே வசமானது. இதனையடுத்து உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சி என்ற புதிய கட்சியை தொடங்கி பாஜகவிற்கு எதிராக விமர்சனங்களை முன் வைத்து வருகிறார்.
இந்த நிலையில் தான் ஏக்நாத் ஷிண்டே பக்கம் இருக்கும் எம்.எல்.ஏக்கள் 22 பேர் உத்தவ் தாக்கரே பக்கம் செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உத்தவ் தாக்கரேவின் தலைமையிலான உத்தவ் பாலாசாகேப் சிவசேனா கட்சியின் பத்திரிக்கையான சாம்னாவில், “ஒரே கூட்டணியில் இருந்தாலும் பாஜவினர் ஏக்நாத் ஷிண்டே அணியினரை மதிப்பதே இல்லை. மாற்றான் தாய் மனப்பான்மையுடன் நடத்துகின்றனர் என்று கட்சியின் முக்கிய தலைவர்கள் புலம்பி வருகின்றனர். ஷிண்டே தரப்பில், 22 எம்.எல்.ஏ.,க்களும், 9 எம்.பிக்களும் கடும் அதிருப்தியில் இருப்பதாகவும், அவர்கள் விரைவில் உத்தவ் தாக்கரே பக்கம் வரவுள்ளதாகவும் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. இது தற்போது மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
சிவசேனாவில் உத்தவ் தாக்கரேவின் அதிகாரத்தை கலைத்து, ஏக்நாத் ஷிண்டேவை பாஜக தனக்கு ஆதரவாக வளர்த்துவிட்டதாக சிவசேனா உடைந்தபோது பேசப்பட்டது. இந்த நிலையில், பாஜவின் செயல்பாடுகளுடன் முரண் ஏற்பட்டு ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்த 22 எம்.எல்.ஏக்கள் மற்றும் 9 எம்.பிக்கள் உத்தவ் தாக்கரே பக்கம் வருவது பாஜவின் திட்டத்திற்கு பெரும் சரிவாக இருக்கும் என சொல்லப்படுகிறது.