எஸ்.பியின் உத்தரவின் பேரில் 22 சாராய வியாபாரிகளை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள மீனவர் குப்பமான எக்கியர் குப்பத்தின் வம்பாமேடு பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் குடித்து 7 பேர் உயிரிழந்த நிலையில், 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 10 லட்சம் ரூபாயும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் நிவாரணமாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், மரக்காணம் காவல நிலைய ஆய்வாளர் உட்பட நான்கு பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவத்திற்கு காரணமானவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் கடலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராய வியாபாரிகள் 22 பேரை காவல்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. கடலூர் எஸ்.பி ராஜாராம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் நேற்று இரவு முதல் அதிரடி சோதனை நடத்தினர். மாவட்டம் முழுவதும் சாராயம் விற்றதாக 88 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாதோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி உள்ளிட்ட இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ஒரே நாளில் சாராய வியாபாரிகள் 22 பேரை கைது செய்துள்ளனர்.