Skip to main content

தஞ்சாவூர் உள்ளிட்ட 21 மாவட்ட தென்னை விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரண நிதி வழங்க உத்தரவிட கோரி வழக்கு

Published on 13/03/2018 | Edited on 13/03/2018
coconut-tree

 

2016- 2017 ஆண்டுகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணம் அடிப்படையில் தஞ்சாவூர் உள்பட 21 மாவட்டங்களை சேர்ந்த தென்னை விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரண நிதி வழங்க உத்தரவிட வேண்டும் என கோரிய வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல்  உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை  ஒத்திவைத்து.


தமிழ்நாடு தேங்காய் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் பழனிவேல், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில்,  " இந்தியால் தேங்காய் சாகுபடியில் உலகில் முதலிடத்தில் உள்ளது.இந்தியாவில் 1.9758 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவில் ஆண்டுக்கு சுமார் 18 முதல் 20 பில்லியன் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது. தேங்காய் சாகுபடி மற்றும் தேங்காய் தொழில்துறையால் 10 முதல் 15 மில்லியன் பேர் பயனடைந்து வருகின்றனர்.

 

மொத்த தேங்காய் உற்பத்தியில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் 90 சதவீத உற்பத்தி நடைபெறுகிறது. எஞ்சிய 10 சதவீத உற்பத்தி ஓரிசா, மேற்கு வங்கம், மஹாராஷ்டிரா, அசாம், குஜராத் மற்றும் அந்தமானில் நடைபெறுகிறது.

 

கேரளாவுக்கு அடுத்து தமிழகத்தில் தான் அதிகளவு தேங்காய் உற்பத்தி நடைபெறுகிறது. தமிகத்தில் 389900 ஹெக்டேர் நிலப்பரப்பில் 5365 மில்லியன் தேங்காய் உற்பத்தி செய்யப்படுகிறது.தமிழகத்தை பொருத்தவரை கோவை, தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்கள் தேங்காய் உற்பத்தியில் முதல் நான்கு இடங்களில் உள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பேராவூரணி, பட்டுக்கோட்டை, நாகப்பட்டிணம், ராமேஸ்வரம், மசூலிப்பட்டணம், கூடலூர் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் தேங்காய் உற்பத்தி நடைபெறுகிறது. இங்கு வளர்ந்துள்ள தென்னை மரங்கள் கடலோர பகுதிகளில் சுற்றுச்சூலை மேம்படுத்துவதுடன், சுனாமி போன்ற இயற்கை பேரிடர்களை தடுக்கவும் செய்கிறது.

 

தமிழகத்தில் 2016- 2017 ஆண்டுகளில் கடுமையாக வறட்சி நிலவியது. மழை அளவு குறைந்ததால் பெரும்பாலான நீர் நிலைகள் வறண்டன. இதனால் விவசாயம் பொய்த்து போனது. விவசாயிகள் விவசாயத்துக்காக வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனர்.

 

இதையடுத்து 32 மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டமாக அரசு அறிவித்தது. வறட்சியால் பாதிக்கப்பட்ட 32,30,101 லட்சம் விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணமாக 2247 கோடி வழங்கப்படும் என அரசு 21.2.2017-ல்   உத்தரவிட்டது. வறட்சி நிவாரண நிதி விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என அரசு அறிவித்தது.


இந்நிலையில் தென்னை விவசாயிகளை பொருத்தவரை திருப்பூர், கோவை, ஈரோடு, திண்டுக்கல், சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ஏக்கருக்கு 18 ஆயிரம் வீதம் 227.862 கோடி வறட்சி நிவாரணம் வழங்கப்பட்டது. தஞ்சாவூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களை சேர்ந்த தென்னை விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் வழங்கப்படவில்லை.

 

மாநில அரசு 32 மவட்டங்களையும் வற்டசி பாதித்த மாவட்டங்களாக அறிவித்துள்ள போது தென்னை விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் போது 11 மாவட்டங்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கிவிட்டு எஞ்சிய 21 மாவட்ட தென்னை விவசாயிகளை புறக்கணிப்பது சட்டவிரோதம்.  எனவே தமிழக அரசு அறிவித்துள்ள வறட்சி நிவாரணம் அடிப்படையில் தஞ்சாவூர் உள்பட 21 மாவட்டங்களை சேர்ந்த தென்னை விவசாயிகளுக்கும் வறட்சி நிவாரண நிதி வழங்க உத்தரவிட வேண்டும்" என மனுவில் கூறப்பட்டிருந்தது.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சத்தியநாராயணன், நீதிபதி ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கினை விசாரித்த நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பினை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

சார்ந்த செய்திகள்