சேலம் மாநகரில் சிறிய, பெரிய குற்றப் பின்னணிகளைக் கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து ஆசாமிகள் உள்ளனர். இவர்களில் 700 பேர் மீது பல்வேறு காவல்நிலையங்களில் ஹிஸ்டரி ஷீட் (போக்கிரித்தாள்) பதிவு செய்யப்பட்டு உள்ளது.
அரசியல் கட்சித் தலைவர்கள் வருகை, வெளிநாட்டு பிரதமர்கள், தூதர்கள் வருகை, தேர்தல் காலங்கள் மற்றும் பண்டிகை காலங்களில் போக்கிரித்தாளில் பதிவு செய்யப்பட்ட ரவுடிகளை காவல்துறையினர் நேரில் சென்று விசாரிப்பதும், அவர்களை காவல்நிலையத்திற்கு நேரில் வரச்சொல்லி கையெழுத்துப் பெறுவதும் நடைமுறையில் இருந்து வருகிறது.
இது ஒருபுறம் இருக்க, போக்கிரித்தாள் பட்டியலில் உள்ள பல ரவுடிகள், குற்றச்செயல்களில் ஈடுபடுவதை அடியோடு நிறுத்தி விட்டதும், பலர் வயதானதால் குற்றச்செயல்களில் ஈடுபடுவதில் இருந்து ஒதுங்கிவிட்டதும் தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, நீண்ட காலமாக குற்றச்செயல்களில் ஈடுபடாத நபர்களை போக்கிரித்தாள் பட்டியலில் இருந்து விடுவிப்பது குறித்து சேலம் மாநகர காவல்துறை ஆணையர் நஜ்மல் ஹோடா, காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்தில், தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக எவ்வித குற்றச்செயல்களிலும் ஈடுபடாத ரவுடிகளை போக்கிரித்தாள் பட்டியலில் இருந்து நீக்கி விட தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, முதல்கட்டமாக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக குற்றச்செயல்களில் ஈடுபடாத 200 ரவுடிகளின் பெயர்கள், போக்கிரித்தாள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள், எவ்வித புகார்களிலும் சிக்காத மேலும் சில ரவுடிகளின் பெயர்களும் போக்கிரித்தாள் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளதாக காவல்துறையினர் கூறுகின்றனர்.