கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டுள்ளதால், பொருளாதாரத்தில் பின் தங்கிய இளம் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.20000 நிதி உதவி வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடு முழுவதும் ஏப்ரல் 14 -ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் உள்ளதால், தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து, பொருளாதாரத்தில் பின் தங்கிய இளம் வழக்கறிஞர்கள் மற்றும் பெண் வழக்கறிஞர்களுக்கு மாதம் ரூ.20000 நிதி உதவி வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் கோரிக்கை கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில், தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் முழு நேர வழக்கறிஞர்களாகப் பணியாற்றி வரும் நிலையில், கடந்த 24 -ஆம் தேதி பிரதமர் மற்றும் அனைத்து மாநில முதல்வர்களுக்கு அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் வைத்துள்ள கோரிக்கையைப் பரிசீலித்து தமிழகத்தில் பணியாற்றும் இளம் மற்றும் பெண் வழக்கறிஞர்களுக்கு இந்த நிதி உதவியை வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.