மதுரை மாவட்டம் அவனியாபுரம் செம்பூரணி சாலையில், தனது மகனின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு, சுமார் 6 லட்சம் மதிப்பீட்டில் தத்ரூப மெழுகுச் சிலை ஒன்றை நிறுவியுள்ளார் அவரது தந்தை.
மதுரையில் உள்ள அவனியாபுரம் பகுதியைச் சேர்ந்த எஸ்.முருகேசன், எம். சரஸ்வதி தம்பதியினருக்கு சுதா மற்றும் கீதா ஆகிய மகள்களும், மாரிகணேஷ் என்ற மகனும் உள்ளனர். மாரிகணேஷ்க்கு 10 வருடங்களுக்கு முன்னர் திருமணமாகி மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சிறுவயது முதலே வீட்டில் உள்ள பெற்றோர்கள் மற்றும் சகோதரிகள் அனைவரும் மாரிகணேஷ் மீது அதீத அன்பு செலுத்தியுள்ளனர். குறிப்பாக மாரிகணேஷ் சிறு புல்லட் பைக் ரேசராக இருந்ததோடு பதக்கங்களும் விருதுகளும் பெற்றுள்ளார். மேலும், பல்வேறு போட்டிகளில் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இந்த நிலையில், மாரிகணேஷ் உடல்நலக் குறைவால், கடந்த ஆண்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், சிகிச்சைப் பலனின்றி கடந்த ஆண்டு நவ.18 ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்நிலையில், மாரிகணேஷின் முதலாமாண்டு நினைவு தினத்தில் அவரது தந்தை முருகேசன், சுமார் 6 லட்சம் செலவில் மாரிகணேஷின் உருவத்தை, தத்ரூபமாக மெழுகுச் சிலை செய்து, அவனியாபுரம் செம்பூரணி சாலையில் உள்ள தனது திருமண மண்டபத்தில் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வழிபாட்டுக்கு வைத்தார்.
தொடர்ந்து மாரிகணேஷின் உருவச் சிலையைக் காணவும், முதலாமாண்டு நினைவு நாளுக்கு அஞ்சலி செலுத்தவும் அவரது குடும்பத்தினரும், நண்பர்களும் மெழுகுச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
மாரிகணேஷின் தந்தை முருகேசன் பேசும்போது, ஆழ்ந்த சோகத்தில் விட்டுச் சென்ற மகனின் நினைவாக வைத்துள்ள சிலையைக் குடும்பத்தார்கள் அனைவரும் பாதுகாத்து வருவார்கள். எங்களில் ஓர் அங்கமாகத் திகழும் என்று கூறினார்.
மாரிகணேஷின் சகோதரி கீதா பேசும்போது, தம்பியின் இழப்பு, குடும்பத்தினர் அனைவருக்கும் மிகுந்த மனக் கஷ்டம் ஏற்படுத்தியது. தற்போது மெழுகுச் சிலை சற்று ஆறுதல் தரும் வகையில் உள்ளது. மாரிகணேஷ் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் இங்கு வந்து மரியாதை செலுத்தி வருவது ஆறுதல் அளிப்பதோடு, தனது தம்பி தங்களோடுதான் இருப்பதாக நம்பிக்கையாக உள்ளதாகத் தெரிவித்தார்.
உடல்நலக் குறைவால் இறந்த தனது மகனின் இழப்பை குடும்பத்தாருக்கும், தனது மகனின் நண்பர்களுக்கும் ஈடுகட்ட சுமார் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 அடிக்கு சிலை வைத்து மரியாதை செலுத்திய தந்தையின் செயல், அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.