சேலத்தில், களஞ்சியம் மகளிர் குழுக்களின் தொடர் முயற்சியால் 20 ஆயிரம் குடும்பங்கள் வறுமையின் கொடிய பிடியில் இருந்து மீட்டெடுக்கப்பட்டு உள்ளன. முற்றிலும் பெண்களால் நிர்வகிக்கப்படும் களஞ்சியம், ஓசையின்றி பெரும் புரட்சியை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது.
சேலத்தில், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அருகே, ஏஸ் பவுண்டேஷன் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இதன் முதலாம் ஆண்டு விழா, ஞாயிற்றுக்கிழமை (பிப். 9) அலுவலக கூட்டரங்கில் நடந்தது. அறக்கட்டளையின் முதன்மை ஆலோசகர் சீனிவாசன் தலைமையில் விழா நடந்தது. சேலம் மண்டல நிர்வாகி சிவராணி கருத்துரை வழங்கினார்.
''விழா முடிவில் சிவராணியைச் சந்தித்துப் பேசினோம். வறுமை ஒழிப்புத் திட்டங்கள் எப்படி சாத்தியமானது?'' எனக்கேட்டோம்.
''மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளிட்ட அனைத்து வகை தொண்டு நிறுவனங்களுக்கும் மேலாண்மைப் பயிற்சி, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை ஏஸ் பவுண்டேஷன் வழங்கி வருகிறது. மத்திய, மாநில அரசுகள் மட்டுமின்றி தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்புத் திட்டங்களின் கீழ் நிதியுதவி பெற்று தொண்டு நிறுவனங்கள் வாயிலாக வறுமை ஒழிப்புத் திட்டங்கள், மரக்கன்று நடுதல், தனிநபர் கழிப்பறைகள் கட்டுதல், மது ஒழிப்பு உள்ளிட்ட சமூக மேம்பாட்டுப் பணிகளையும் செய்து வருகிறோம்.
இப்பணிகளை முதன்மை நோக்கங்களாக கொண்டு சேலத்தில் கடந்த ஆண்டு இதே நாளில் (9.2.2019), 4130 களஞ்சியம் மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 52 ஆயிரம் பெண்கள் ஒன்று சேர்ந்து, இந்த அறக்கட்டளையை தொடங்கினர். எங்களின் சீரிய பணிகளால், ஒரே ஆண்டில் 8000 களஞ்சியம் மகளிர் குழுக்கள் இணைந்திருக்கின்றன. இதன் மூலம், தற்போது லட்சம் குடும்பத் தலைவிகளைக் கொண்ட பெரும் அறக்கட்டளையாக உருவெடுத்திருக்கிறோம்.
எங்கள் அறக்கட்டளையின் பெயர்தான் புதியதே தவிர, இங்குள்ள களஞ்சியம் குழுக்களுடன் 20 ஆண்டுகளாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். மகளிரிடம் சேமிக்கும் பழக்கத்தை கொஞ்சம் கொஞ்சமாக ஏற்படுத்தினோம். இப்போதும் களஞ்சியம் பெண்கள் மாதம் 200 அல்லது 300 ரூபாய்தான் சேமிப்புத் தொகையாக செலுத்தி வருகின்றனர். சில இடங்களில் இத்தொகை மாறுபடலாம். அது, குழுவின் விதிகளைப் பொருத்தது. அதாவது ஒரு நாளைக்கு பத்து 10 ரூபாய் சேமிப்புக்காக ஒதுக்கப் பழக்கப்படுத்துகிறோம். 'உண்மையில் சிறுதுளி பெருவெள்ளம்' என்ற பழமொழி களஞ்சியம் பெண்களுக்குதான் பொருந்தும். குழுவில் 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கும் பெண்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 35 ஆயிரம் ரூபாய்க்கு மேல் தங்களது சேமிப்புத் தொகையாக சேர்த்து வைத்துள்ளனர்.
குழுக்களின் சேமிப்புத்தொகையைப் போல மூன்று மடங்கு வரை வங்கிகளில் இருந்து கடனுதவி பெற்றுக் கொடுக்கிறோம். இந்தியன் வங்கி, தமிழ்நாடு கிராம வங்கி, 'பாங்க் ஆப் இந்தியா' ஆகிய வங்கிகளின் பங்களிப்பும், ஒத்துழைப்பும் அளப்பரியது. கடனுதவி கேட்டு விண்ணப்பிக்கும்போது, என்ன காரணத்திற்காக கடன் தேவை என்பதை மனுவில் குறிப்பிட வேண்டும். பெரும்பாலும், தங்கள் பிள்ளைகளின் படிப்புச்செலவு, ஏதேனும் சுய தொழில் தொடங்க அல்லது மருத்துவச் செலவுகளுக்காக கடன் கேட்பவர்கள்தான் அதிகம். என்ன நோக்கத்துக்காக கடனுதவி பெற்றார்களோ அது நிறைவேறுகிறதா என்பதையும் களஞ்சியம் ஊழியர்கள் மூலம் கண்காணிப்போம்.
சேமிப்பின் மீது மட்டுமின்றி, முத்ரா திட்டத்தின் கீழும் பலருக்கு 5 லட்சம் ரூபாய்கூட கடனுதவி பெற்றுக் கொடுத்திருக்கிறோம். இதன்மூலம் பெண்கள் தங்கள் வீடுகளில் விசைத்தறிக் கூடங்களை நிறுவி இருக்கிறார்கள். சேலம் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற இளம்பிள்ளை ரக பட்டு சேலைகள் மட்டுமின்றி கேரளா ரக சேலைகள், ஆரணி பட்டு, கோவை பட்டு சேலைகள், வேட்டிகளும் நெய்து வருகின்றனர்.
நன்றாக சமைக்கத் தெரிந்த பெண்கள் வீட்டிலேயே பலகாரம், இனிப்புகள் தயாரித்து விற்கின்றனர். கிராமப் பொருளாதாரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்பதும் எங்களது மற்றொரு குறிக்கோள். கறவை மாடுகள், ஆடுகள் உள்ளிட்ட கால்நடைகள் வாங்க ஆர்வம் காட்டும் களஞ்சியம் பெண்களுக்கு கடனுதவி வழங்க முன்னுரிமை அளிக்கிறோம். கடந்த 20 ஆண்டுகளில் சுமாராக 20 ஆயிரம் குடும்பங்களை வறுமையின் பிடியில் இருந்து மீட்டெடுத்து, சமூகத்தில் அவர்களை தலைநிமிர்ந்து வாழச் செய்திருக்கிறோம்,'' என்கிறார் சிவராணி.
இன்றைய காலக்கட்டத்தில் ஆவணப்படுத்துதலும் முக்கியம் அல்லவா? அதனால்தான், வறுமையில் இருந்து மீண்ட குடும்பத்தலைவிகளை தேர்வு செய்து, 'புதிய வானம்' என்ற பெயரில் நூலாக தொகுத்து வெளியிடுகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் களஞ்சியம் கு-ழுக்களுக்கு 1200 கோடி ரூபாய் வரை வங்கிகள் மூலம் கடனுதவி பெற்றுக் கொடுக்கப்பட்டு உள்ளது என்பதைக் கேட்டு நமக்கும் வியப்பு மேலிட்டது. இப்பெண்கள் சிறுகச்சிறுக 80 கோடி ரூபாய் சேமிப்பாக தங்களது குழு க்களின் பெயர்களில் வங்கிகளில் சேமிப்பாக வைத்திருக்கிறார்கள். பெண்களின் இத்தகைய சேமிப்புப் பழக்கத்தால்தான் பொருளாதார மந்த நிலையிலும் இந்திய பெரிய அளவில் நிலைகுலைந்து போவதில்லை. குறிப்பாக, தமிழ்நாடு.
வறுமையில் இருந்து மீண்ட பெண்களில் ஒருவரான ஆட்டையாம்பட்டியைச் சேர்ந்த சங்கத்தமிழ் களஞ்சியம் குழு உறுப்பினர் பாஞ்சாலை என்பவரையும் சந்தித்தோம்.
'எங்கள் பகுதியில் கைமுறுக்கு தயாரிப்புத் தொழில் பிரசித்தி பெற்றது. கைமுறுக்குக்குத் தேவையான அரிசி மாவு ஆட்டுவதில் பல பெண்கள் சிரமப்பட்டனர். அவர்களுக்கு உதவும் நோக்கில் ஆரம்பத்தில் ஒரே ஒரு கிரைண்டர் மெஷின் வாங்கி மாவு அரைத்துக் கொடுத்தேன். பலரிடமும் வரவேற்பு இருந்தது. அதன்பிறகு, களஞ்சியம் குழு மூலமாக 50 ஆயிரம் ரூபாய் கடனுதவி பெற்று, கோவையில் இருந்து புதிதாக இரண்டு கிரைண்டர் மெஷின்கள் வாங்கினேன்.
அதற்கு முன்பும் களஞ்சியம் அளித்த 20 ஆயிரம் ரூபாய் கடனுதவி மூலம்தான் இந்த தொழிலை ஒரே ஒரு கிரைண்டரை வைத்துத் தொடங்கினேன். ஒரு கிலோ மாவு அரைத்துக் கொடுத்தால் கிலோவுக்கு 10 ரூபாய் சேவைக்கட்டணம் வசூலிக்கிறேன். தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் என் வீட்டில் கிரைண்டர் ஓடிக்கொண்டே இருக்கும். என் வீட்டுக்காரரை விட நான்தான் இப்போது அதிகமாக சம்பாதிக்கிறேன்,'' என்றார்.
சேலம் களஞ்சியம், வறுமை ஒழிப்பில் இருந்து மட்டுமின்றி, பல பெண்களின் கணவன்மார்களை மதுவின் பிடியில் இருந்தும் வெற்றிகரமாக மீட்டெடுத்திருப்பதாகவும் சொன்னார் 'ஏஸ் பவுண்டேஷன்' சிவராணி.