ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அருகே செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி விடுதியில் பட்டியலின சமூகத்தினருக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கக் கோரி கல்லூரி மாணவ மாணவிகள் ஆட்சியரகத்தில் மனு அளித்தனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்துள்ள எழுமாத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஏராளமான மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் இக்கல்லூரியில் உள்ள தங்கும் விடுதியில் பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த மாணவர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுவதாகவும், பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு பவானி போன்ற பகுதிகளில் விடுதி அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், தொலை தூரத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்து கல்லூரிக்கு வருவதால் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு கல்வி பாதிக்கப்படுவதாகவும், இதனால் கல்லூரியில் உள்ள விடுதியில் பட்டியலின சமூகத்தினருக்கு 20 சதவீதம் இட ஒதுக்கீடு ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கூறி மாவட்ட ஆட்சியரகத்தில் கல்லூரி மாணவ மாணவிகள் கோரிக்கை மனு அளித்தனர்.