விழுப்புரம் மாவட்டம் ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பழனிவேல் மகன் லோகேஷ் (23), அதே ஊரைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் கோகுல் (25), பூவன் மகன் பாரதி (29). இவர்கள் 3 பேரும் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் கூலி தொழிலாளயாக பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் கடந்த வாரம் லோகேஷ் பிறந்தநாள் விழாவுக்காக 3 பேரும் சொந்த ஊருக்கு வந்துள்ளனர் . பின்னர் ( ஜூலை 14) ஞாயிற்றுக்கிழமை 3 பேரும் இருசக்கர வாகனத்தில் பண்ருட்டி நகரத்திற்கு வந்து வேலையை முடித்துவிட்டு இரவு 8 மணி அளவில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது மனம்தவழ்ந்தபுத்தூர் கிராம பிள்ளையார் கோவில் அருகே செல்லும் போது எதிரே வந்த டாரஸ் லாரி எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனத்தில் மோதியதால் 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
இது பற்றி தகவல் தகவல் அறிந்த புதுப்பேட்டை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விபத்தில் சிக்கிய 3 உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரைணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுகுறித்து மனப்பத்தூர் கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் கூறுகையில், “இந்த விபத்து புதியது அல்ல. கடந்த 10 ஆண்டுகளில் 50-க்கும் மேற்பட்ட விபத்துகள் இதுபோன்று நடைபெற்றுள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்டவர்கள் உயிர் பலியாகியுள்ளனர். உதாரணத்திற்கு கடந்த 1 ஆண்டுக்கு முன் மேல் அருங்குணத்தை சேர்ந்த 3 பேர் இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது எதிரே வந்த கார் மோதி 2 பேர் பலியானர்கள். ஒருவர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று உயிர் தப்பினர். அதேபோல் 6 மாதத்திற்கு முன் அதே ஊரைச்சேர்ந்த ஒருவர் பேருந்தில் மோதி உயிர் பலியானார். இதுபோன்ற எண்ணற்ற உயிர்கள் பலியாகியுள்ளது. இந்த விபத்து நடந்த இரண்டு நாட்கள் மட்டும், விபத்து நடந்த இடத்தில் பேரிகார்டு வைப்பார்கள். அதன் பிறகு எடுத்து சென்றுவிடுவார்கள். இதனால் தொடர்ந்து உயிர் பலி ஏற்பட்டு வருகிறது.
மேலும் புதுப்பேட்டை காவல்துறையினர் விபத்து நடந்த இடத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்திற்கு முன்பு நின்று கொண்டு இரவு நேரத்தில் கூலி வேலை செய்துவிட்டு வருபவர்களை தடுத்து நிறுத்தி வசூல் செய்யும் வேலையில் ஈடுபட்டு வருகின்றனர். காக்கிச்சட்டையை பார்த்துவிட்டு சிலர் வேகமாக செல்லும் போது இதுபோன்ற விபத்துகள் அடிக்கடி நடைபெறுகிறது. புதுப்பேட்டை காவல்நிலையம் கிராமபுறங்களை உள்ளடக்கியதாக உள்ளது. இங்கு நடைபெறும் பல்வேறு குற்றச்செயல்களை உளவு பிரிவு , தனிபிரிவு காவலர்கள் காவல்நிலையத்தில் உள்ள காவலர்களுடன் கூட்டு சேர்ந்துகொண்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிப்பது இல்லை. அவர்கள் சரியாக செயல்பட்டால் இங்கு குற்றங்கள் அதிக அளவு நடைபெறாது.
புதுப்பேட்டை காவல்துறையினர் வசூல் செய்வதில் காட்டும் ஆர்வம் 1 பங்கு கூட கடந்த 10 ஆண்டுகளில் இந்த இடத்தில் 50-க்கும் மேற்பட்ட விபத்துகள் 20-க்கும் மேற்பட்ட உயிர் பலி வாகன விபத்தை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனையாக உள்ளது. மேலும் வாகன சோதனையில் போலீசார் தடுத்து நிறுத்தி நிற்க வைத்த பிறகு வாகன சோதனை கூட்டம் அதிகம் ஆனால் ஏற்கனவே நிற்க வைத்த இளைஞர்கள் போலீசை ஏமாற்றிவிட்டு வாகனத்தை எடுத்து செல்வதைப் பார்த்து விட்டால் அவர்களை போலீசார் துரத்தும் போது இதுபோன்ற விபத்து நடைபெறுகிறது. அல்லது அவர்கள் வண்டியை நிறுத்த கூறும் போது நிறுத்தாமல் சென்று விட்டால் அவர்களை விரட்டுவதால் இதுபோன்ற விபத்துகள் இந்த இடத்தில் நடைபெறுகிறது
இனிமேலாவது காவல்துறை மற்றும் உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அடிக்கடி விபத்து நடைபெறும் இடத்தில் இருள் இல்லாமல் மின்விளக்கு வசதி ஏற்படுத்த வேண்டும். விபத்தை தடுக்கும் வகையில் பேரிகார்டில் ஒளிர்பான்கள் ஒட்ட வேண்டும். பேரிகார்டுகளை எடுத்து செல்லாமல் அதே இடத்தில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.