Skip to main content

கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 2 ஆயிரம் பேர்

Published on 18/08/2017 | Edited on 18/08/2017
கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட 2 ஆயிரம் பேர்



நூறுநாள் வேலைத்திட்டத்தை பேரூராட்சிகளுக்கும் விரிவுபடுத்த வலியுறுத்தி விவசாயத் தொழிலாளர்கள் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு  2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயத் தொழிலாளர்கள் கோரிக்கைமனுவுடன் வெள்ளிக்கிழமையன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில்  மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தை பேருராட்சிப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தக் கோரி தமிழகம் முழுவதும் பல்வேறு வடிவங்களில் பேராட்டங்கள் நடைபெற்று வருகிறது. முதல்கட்டமாக அந்தந்த பேரூராட்சி அலுவலகங்களை முற்றுகையிட்டு இந்தப் போராட்டம் நடைபெற்றது. அடுத்தகட்டமாக மாவட்டம் அளவில் பேரூராட்சிகளைச் சேர்ந்த விவசாயத் தொழிலார்களைத் திரட்டி மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து மனுக்கொடுக்கும் போராட்டம் நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் வெள்ளிக்கிழமையன்று புதுக்கோட்டையில் இந்தப் போராட்டம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள எட்டுப் பேரூராட்சிகளிலும் இருந்து 2 ஆயிரத்திற்கும் அதிகமான விவசாயத் தொழிலாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.  கோரிக்கை மனுக்களுடன் முழக்கங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக வந்த விவசாயத் தொழிலாளர்களை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், அலுவலக வாயிலில் அமர்ந்து விவசாயத் தொழிலாளர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

போராட்டத்திற்கு தலைமை வகித்த சங்கத்தின் மாநிலத் தலைவரும் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினருமான ஏ.லாசர் தொழிலாளர்கள் மத்தியில் உரையாற்றும் போது, தமிழகத்தில் 528 பேரூராட்சிகள் உள்ளன. இங்கு வாழும் பெரும்பகுதியான மக்கள் விவசாயத்தையும் அது சார்;ந்த தொழிலையும் மட்டுமே உள்ளனர். பேரூராட்சிப் பகுதிகளில் மட்டும் சுமார் 40 விவசாயத் தொழிலாளர்கள் உள்ளனர். கடும் வறட்சியின் காரணமாக இவர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.

இவர்களுக்கு நூறுநாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும். சட்டப்படியான கூலி ரூ.205-ஐ குறைக்காமல் வழங்குவதோடு கூலியை ரூ.400-ஆக உயர்த்தி வழங்க வேண்டும். வேலை நாட்களை 150 நாட்களாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி நாங்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை நடத்தி வருகிறோம். எங்கள் கோரிக்கைகளை முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், இந்நாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துறை அமைச்சர்கள், அதிகாரிகளிடமும் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம். உங்கள் கோரிக்கை நியாயமானது பரிசீலிக்கிறோம் என்கிறார்களே தவிர நடைமுறைப்படுத்த எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

மக்களுக்காகத்தான் சட்டமே தவிர, சட்டத்துக்காக மக்கள் இல்லை. எனவே, உரிய சட்டத்திருத்ததைச் செய்து பேரூராட்சிகளுக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்தை விரிவுபடுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களின் அடுத்தகட்டப் போராட்டம் மாநில அளவில் சென்னையே ஸ்தம்பிக்கும் அளவில் இருக்கும் என்றார். 

போராட்டத்திற்கு   சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.சங்கர், மாவட்டத் தலைவர் வி.துரைச்சந்திரன் நிர்வாகிகள் கே.சண்முகம், வே.வீரையா, வி.மணிவேல், பி.மருதப்பா, கே.சித்திரரைவேல், ஏ.வைரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜசேகரன், விவசாயிகள் சங்க மாவட்ட நிர்வாகிகள் எஸ்.பொன்னுச்சாமி, ஏ.ராமையன், எம்.முத்துராமலிங்கம் ஆகியோர் பேசினர்.

போராட்டப்பகுதிக்கு வருகைதந்த கோட்டாட்சியர் ஜெயபாரதி மாவட்ட ஆட்சியர் வேலை காரணமாக வெளியில் சென்றுவிட்டதால் அவரின் சார்பில் தாம் மனுக்களைப் பெற்றுக்கொள்வதாகக் கூறினார். பின்னர், அவரிடம் தொழிலாளர்கள் அனைவரும் கோரிக்கை மனுக்களை அளித்துவிட்டுச் சென்றனர்.

பகத்சிங்

சார்ந்த செய்திகள்