சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் மேட்ரிமோனி இணையதளத்தில் வரன் தேடி வந்துள்ளார். அவரின் மேட்ரிமோனி புரொபைல் பார்த்து ஹாங்காங்கில் டாக்டராக இருப்பதாக கூறி ஒருவர் வாட்ஸ்அப்பில் தொடர்புகொண்டு பேசத் தொடங்கியுள்ளார். அவரின் பெயர் அலெக்ஸாண்டர் சான்சீவ். இருவரும் மருத்துவதுறை என்பதால், வெளிநாட்டு டாக்டர் மீது பெண் மருத்துவருக்கும் திருமணம் ஆசை வந்துள்ளது. இருவரும் தொடர்ந்து சமூக வலைத்தளம் மூலமாக நாடுகடந்து காதலித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், வெளிநாட்டு மாப்பிள்ளை அலெக்ஸாண்டர் சான்சீவ் தனது வருங்கால மனைவியான பெண் மருத்துவருக்கு ஆசையாக விலை மதிப்பு மிக்க பரிசுப் பொருட்களை அனுப்பி வைத்ததாக போனில் தெரிவித்துள்ளார். அதைக்கேட்டு இம்ப்ரஸான பெண் மருத்துவர், தனது வருங்கால ஹாங்காங் கணவன் அனுப்பிய பரிசுப் பொருட்களை திறந்து பார்க்க ஆசையுடன் காத்திருந்துள்ளார். இதையடுத்து, டெல்லி விமான நிலையத்தில் இருந்து சுங்கத்துறை அதிகாரி பேசுவதாக கூறி பெண் மருத்துவரை தொடர்பு கொண்ட அதிகாரிகள், ''உங்களுக்கு ஹாங்காங்கில் இருந்து பார்சல் வந்திருக்கு..'' என்ற இனிப்பு செய்தியை கூறி முகவரியை சரிபார்த்துள்ளனர். இதைக்கேட்டு உள்ளம் மகிழ்ந்த பெண் மருத்துவர் முகவரியை உறுதிப்படுத்தி, பார்சல் எப்போது சென்னை வந்து சேரும் எனக்கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அதிகாரிகள், ''பார்சலை ஸ்கேன் செய்து பார்த்தபோது வைர நெக்லஸ், நகைகள் மற்றும் விலை உயர்ந்த பொருள்கள் உள்ளன.
எனவே அதற்கு சுங்கவரி செலுத்தினால் மட்டுமே பொருட்களையும் உங்கள் முகவரிக்கு அனுப்பி வைக்க முடியும். இல்லையென்றால் டெல்லி போலீஸாரிடம் தகவலைச் சொல்லி உங்களை அரஸ்ட் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்'' என கறாராக பேசியுள்ளனர். தொடர்ந்து பேசியவர்கள், ''டெல்லி போலீஸ் பிடியில் இருந்து தப்பிக்க வேண்டுமென்றால் நாங்கள் கொடுக்கின்ற வங்கிக் கணக்குகளுக்கு தனித்தனியே சுங்கவரி அனுப்ப வேண்டும்..'' என அதிர்ச்சி தகவலை கூறியுள்ளனர். இதை உண்மை என நம்பிய பெண் மருத்துவர் தனது வருங்கால கணவருக்காக சுங்கத்துறை அதிகாரிகள் கூறிய பல்வேறு வங்கிக் கணக்குக்கு ரூ.2 கோடியே 87 லட்சம் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அதன் பிறகும் அவர்கள் கூறிய நேரத்தில் பரிசுப் பொருட்கள் வந்து சேரவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து, விளக்கம் கேட்க போன் செய்த பெண் மருத்துவர் அதிர்ந்து போயுள்ளார். டெல்லி சங்கத்துறை அதிகாரிகள் என பேசியவர்கள் செல்போன்கள் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.
உடனே, தனது வெளிநாட்டு மாப்பிள்ளைக்கு தொடர்புகொண்டுள்ளார் பெண் மருத்துவர். அவரது போனும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதை அறிந்து தான் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்துள்ளார். இதையடுத்து தாமதிக்காமல் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து, புகாரைப் பெற்றுக்கொண்ட மத்திய குற்றப்பிரிவின் கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரி அளித்த உத்தரவின்பேரில் துணை கமிஷனர் கீதாஞ்சலி மேற்பார்வையில் சைபர் க்ரைம் ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில், பெண் மருத்துவர் கொடுத்த செல்போன் நம்பர் மற்றும் வங்கி கணக்கை வைத்து குற்றவாளிகள் டெல்லியில் இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து, தனிப்படை போலீசார் டெல்லி விரைந்தனர். ஆனால், அந்த மோசடி கும்பல் தங்கியிருக்கும் இடம் குறித்து தகவல் ஏதுமில்லாமல் தனிப்படை போலீசார் வியூகம் ஒன்றை அமைத்துள்ளனர். இதையடுத்து, பெண் மருத்துவர் அனுப்பிய பணத்தை மோசடி கும்பல் ஏ.டி.எம் மூலம் எடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் டெல்லியிலேயே போலீசார் சில தினங்கள் தங்கியிருந்துள்ளனர்.
அவர்கள் நினைத்தபடியே டெல்லியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம் மையங்களில் மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் பணம் எடுத்துள்ளனர். ஆனால், டெல்லியில் கடும் பனி குளிர் நிலவுவதால் மோசடி கும்பலைச் சேர்ந்தவர்கள் முகத்தை மறைத்தப்படி மங்கி குல்லா மற்றும் மாஸ்க் அணிந்து வந்ததால் சிசிடிவி மூலம் அவர்களின் அடையாளம் காண்பது சிக்கலாக இருந்துள்ளது. இதையடுத்து, முகத்தை மறைத்தபடி 20-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுத்த மோசடி கும்பல்களின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்த போலீசார் வீடியோவில் ஒரு முக்கிய க்ளூ இருப்பதை கண்டுபிடித்தனர். அதில், மோசடி கும்பலைச் சேர்ந்த ஒருவரின் கருப்பு நிற செருப்பில் B என்ற ஆங்கில எழுத்து எழுதப்பட்டிருப்பதை க்ளூவாக வைத்து அந்த செருப்பை அணிந்து ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுப்பவர்களை தமிழக தனிப்படை போலீசார் கண்காணித்து வந்துள்ளனர். அதன் மூலம், பி எழுத்து எழுதப்பட்ட கறுப்பு நிற செருப்பை அணிந்து ஏ.டி.எம்-முக்கு வந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த அகஸ்டின் மதுயாபுச்சி என்பவரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர். அவரைத் தொடர்ந்து, சின்னெடூ என்ற மற்றோரு நைஜீரிய நபரையும் கைது செய்து விசாரணை செய்தனர். அதில் இருவரும் சேர்ந்து சென்னை பெண் மருத்துவரிடம் அமெரிக்க டாக்டர் மாப்பிள்ளை, சுங்கத்துறை அதிகாரி, டெல்லி போலீஸ் என கூறி 2 கோடியே 87 லட்சம் ரூபாயை மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்கள் மோசடி சம்பவத்திற்கு பயன்படுத்திய 7 செல்போன்கன், 3 லேப்டாப்கள் மற்றும் 40 டெபிட் கார்டுகளைப் பறிமுதல் செய்தனர். அதன் பின்னர், இருவரையும் சென்னைக்கு அழைத்து வந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், போலீசார் அவர்களிடம் செய்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. இந்த மோசடி கும்பலின் தலைவன் நைஜீரியாவிலிருந்தபடியே, கல்வி, டூரிஸ்ட், வேலை உள்ளிட்ட விசாக்களில் இந்தியாவுக்கு சிலரை அனுப்பிவைத்து, சைபர் க்ரைம் குற்றங்களில் ஈடுபட்டு வரும் அதிர்ச்சி பின்னணி தமிழக போலீசாருக்கு தெரியவந்தது.
மேலும், இவர்கள் திருமண தகவல் மையங்களிலிருந்து டாக்டர், இன்ஜினீயர், தொழிலதிபர்களைத் தேர்வு செய்து, கிஃப்ட் அனுப்பியிருப்பதாகவும் அதற்கு சுங்கவரி செலுத்த வேண்டும் என்று கூறி மோசடியில் ஈடுபடுவது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், கும்பலின் தலைவனையும், பெண் மருத்துவர் இழந்த பணத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிநாட்டு மாப்பிள்ளை மோகத்தில் சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் 2 கோடியே 87 லட்சம் ஏமாற்றமடைந்த நிலையில்.. தமிழக போலீசார் விரைந்து குற்றவாளிகளை மீட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.